பேசக்கூடாத முடியாத, மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

வள்ளுவர் கோட்டத்தில் கடந்த பிப்.27ம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தவறான தகவல்களை பரப்பியதாக திருமுருகன் காந்தி மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக டைசன், அருள்முருகன் உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முன்னர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை ஆகிய தமிழகப் பிரச்னைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பேசிய திருமுருகன் காந்தியை இந்தியா திரும்பியபோது பெங்களூரு விமான நிலையத்தில்  போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட திருமுருகன் காந்தி, தனிமைச் சிறை, சுகாதாரமில்லாத உணவு போன்றவற்றால் உடல் நிலை நலிவடைந்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில் அவர் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு உயிருக்கே ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக மே 17 இயக்க நிர்வாகிகள் தெரிவித்துவந்த நிலையில் இந்த புதிய வழக்கு அவர்களை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

இது குறித்துப் பேசிய மே 17 இயக்க நிர்வாகி ஒருவர்,”குடற்புண், தலைவலி போன்றவற்றால் அவதியுற்ற திருமுருகன் காந்திக்கு, சென்னை எழும்பூர் மற்றும் செங்கல்பட்டு நீதிமன்றங்கள் நிபந்தனை ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து வெளியில் வந்தவர் தொடர்ந்து உடல் நிலை பாதிக்கப்பட்டார். தற்போது மீண்டும் சிகிச்சை பெற்று வருகிறார். 

அவரால் முன்புபோல் சரிவர இயங்க முடியவில்லை. அவருக்கு மிகவும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.  அவரால் தற்போதைக்குப் பேசமுடியாது. சிறையில் அவருக்குக் கொடுக்கப்பட்ட உணவில்தான் பிரச்னை இருந்துள்ளது. குறிப்பாக ``பாதரசம்" கலந்த உணவாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அவருக்குக் கொடுக்கப்பட்ட உணவு குறித்துப் பரிசோதனை நடத்த அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய உள்ளேன்" என்றார்.