மாஸ்டர் திரைப்படத்தை தமிழ்ப்புத்தாண்டுக்கு ரிலீஸ் செய்யும் வேகத்துடன் பணிகள் நடைபெற்று வந்தன. ஊரடங்கிற்கு முன்னதாகவே படத்தின் ஆடியோ ரிலீஸ் செய்யப்பட்டு விட்டது. ஆனால் டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரடக்சன் பணிகள் சிறிது பென்டிங்கில் இருந்த காரணத்தினால் படத்தை தமிழ் புத்தாண்டில் ரிலீஸ் செய்ய முடியவில்லை. மேலும் மார்ச் கடைசி வாரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மாஸ்டர் போஸ்ட் புரடக்சன் பணிகள் தாமதமாகின. இருந்தாலும் கூட டெக்னீசியன்களை வீட்டிலேயே வைத்து இயக்குனர் லோகேஷ் வேலை வாங்கி வந்ததாக கூறுகிறார்கள்

.

மேலும் போஸ்ட்  புரடக்சன் பணிகளுக்கு தளர்வுகள் கிடைத்த நிலையில் மின்னல் வேகத்தில் மாஸ்டர் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. ஆனால் திரையரங்ககளை திறக்க தமிழக அரசு தொடர்ந்து தடை விதித்து வருகிறது. அடுத்த மாதம் துவக்கத்தில் திரையரங்குகளுக்கு சில கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி திரையரங்குகளில் திறக்கப்பட்டால் முதல் படமாக மாஸ்டரை ரிலீஸ் செய்ய வேலைகள் நடைபெற்று வருகின்றன.

திரையரங்க உரிமையாளர்கள் சிலர் மூலம் இதற்கான பணிகளை விஜய் தரப்பு செய்து வருகிறது. ஆனால் மாஸ்டர் திரைப்படத்தின் வியாபாரம் தொடர்பாக சில தகவல்களை தயாரிப்பு நிறுவனம் மறைத்துவிட்டதாக பேச்சு அடிபடுகிறது. வழக்கமாக ஒரு படத்தின் வியாபாரத்தின் அடிப்படையில் கட்டிங் கொடுத்தால் தான் பிரச்சனை இல்லாமல் அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியும். ஆனால் உண்மையை மறைத்த தகவலை மோப்பம் பிடித்த அதிகாரத் தரப்பு, இது குறித்து கேட்ட போது தயாரிப்பு தரப்பிடம் இருந்து சரியான பதில் இல்லையாம்.

இதனால் படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் தடுக்கும் பணியில் அதிகாரத் தரப்பே நேரடியாக ஈடுபட்டுள்ளதாக கூறுகிறார்கள். மேலும் சர்கார் படத்தில் அதிமுகவிற்கு எதிராக இருந்த காட்சிகள் தொடர்பான விவகாரத்தையும் தற்போது தூசி தட்டுகிறார்களாம். இந்த நிலையில் தான் மாஸ்டர் படத்தை தற்போது ரிலீஸ் செய்யக்கூடாது என்று தயாரிப்பாளர் கேயார் வெளிப்படையாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். பிரபல தயாரிப்பாளரான அவர் இப்படி வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டிருப்பது அதிகாரத் தரப்பின் தூண்டுதலால் தான் என்று கூறுகிறார்கள்.

பெரிய நடிகர்களின் படத்தை இப்போது ரிலீஸ் செய்ய முடியாது, பாருங்கள் உங்கள் சினிமா உலகை சேர்ந்தவரே எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்று காரணத்தை கூறி மாஸ்டர் ரிலீஸை தற்போதைக்கு இல்லாமல் செய்ய நகர்த்தப்பட்ட காய் தான் கேயார் என்கிறார்கள்.