காவிரி உரிமையை பாதுகாப்பதைவிட மெரினா கடற்கரையை பராமரிப்பதுதான் அரசுக்கு முக்கியமா? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்து வரும் சூழ்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி வழங்கக் கோரி விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்துக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, தமிழக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். காவிரியைவிட மெரினா முக்கியமா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தை தவிர 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு மெரினா கடற்கரையில் போராட்டம் நடக்கவில்லை என்று தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கூறினார்.

வைகுண்ட ஏகாதசி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கான மக்கள் கோயில், தேவாலயங்களில் கூடுகிறார்கள் என்பதால், பண்டிகை கொண்டாட தடை விதிக்க முடியுமா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். போராட்டத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது; போராட்டத்தைத் தடுக்க அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று நீதிபதி கூறினார்.