சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் மன்சூர் அலிகான், எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தனக்கு ஜாமீன் வழங்கப்படாததை கண்டித்தும் இன்று காலை முதல் உண்ணாவிரதம் இருந்துவருகிறார். 

சென்னை - சேலம் எட்டு வழி சாலை அமைக்கும் திட்டத்திற்கு விவசாயிகளும் மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சாலை விரிவாக்கத்திற்காக விவசாய நிலங்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கைப்பற்றப்படும். அதனால் பாதிக்கப்படக்கூடிய விவசாயிகளும் மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இதற்கிடையே சேலம் மாவட்டத்திற்கு சென்று நீர்நிலைகளை பார்வையிட்ட நடிகர் மன்சூர் அலிகான், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, எட்டுவழிச்சாலையை அமைத்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன் என்று ஆவேசமாக பேசினார். 

அதனால் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 17ம் தேதி மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதற்கு மறுநாள் இரவே சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷும் கைது செய்யப்பட்டார். 

இருவரும் ஜாமீன் கோரி சேலம் மாவட்டம் ஓமலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், பியூஷ் மானுஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஆனால் மன்சூர் அலிகானுக்கு ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது. 

இந்நிலையில், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் மன்சூர் அலிகான், எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தனக்கு ஜாமீன் வழங்கப்படாததை கண்டித்தும் இன்று காலை முதல் உண்ணாவிரதம் இருந்துவருகிறார்.