காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்காக ராஜஸ்தானில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 2019 வரை 28 ஆண்டுகள் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருடைய பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. அஸ்ஸாமிலிருந்து மன்மோகனை தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சிக்கு போதிய உறுப்பினர் எண்ணிக்கை இல்லாததால், அவரால் மீண்டும் போட்டியிட முடியவில்லை. மேலும் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தல் எதுவும் இல்லை என்பதால், மன்மோகன் சிங்கால் மீண்டும் எம்.பி.யாக முடியவில்லை

.
இந்நிலையில் ராஜஸ்தானிலிருந்து கடந்த ஆண்டு பாஜக சார்பில் தேர்வு செய்யப்பட்ட மதன் லால் சைனி என்பவர் அண்மையில் காலமானார். இதனால், அவருடைய மாநிலங்களவையில் ஓரிடம் காலியானது. தற்போது அந்தக் காலி இடத்துக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில்  தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருவதால், மன்மோகன் சிங்கைத் தேர்வு செய்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. இதற்கிடையே இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று ராஜஸ்தான் வரும் மன்மோகன் சிங், ஜெய்ப்பூரில் உள்ள சட்டப்பேரவை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.


மன்மோகன் சிங் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் நிலை உள்ளது. இந்தப் பதவியில் மன்மோகன் சிங் சுமார் 5 ஆண்டுகாலம் வரை பதவியில் இருக்க முடியும்.