2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி விரும்பினால் இணைந்து போட்டியிட தயார் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி விரும்பினால் இணைந்து போட்டியிட தயார் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். உ.பி, உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற இந்த வாக்குப் பதிவு கடந்த 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் ஐந்து மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் நேற்று தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. உ.பி. உட்பட 5 மாநிலங்களில் நான்கு சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றிப்பெற்றது. காங்கிரஸ் பெரும் தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் காங்கிரஸ் விரும்பினால் 2024ல் இணைந்து போட்டியிட தயார் என்று காங்கிரஸ் கட்சிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், 5 மாநில தேர்தல் முடிவுகளை கண்டு சோர்வடைய வேண்டாம், நேர்மறையாக சிந்தியுங்கள். 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று கூறுவது நடைமுறை சாத்தியம் அற்றது. நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் பாஜகவின் அமோக வெற்றியை நிராகரித்த மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சியை தோற்கடிக்க வாக்குகள் கொள்ளையடிக்கப்பட்டது என்று குற்றம் சாட்டினார். காங்கிரஸை நம்பி எதுவும் நடக்காது. அனைத்து பிராந்திய கட்சிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

மேலும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்கள் என்னை ஒதுக்கினாலும், எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் அவர்களாவது ஒன்றாக இருக்கட்டும் என்று தெரிவித்தார். ஏற்கனவே உ.பி உட்பட ஐந்து மாநிலங்களில் நான்கு சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்ற பிறகு, திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் காங்கிரஸை குறிவைத்து, தேசிய அளவில் பாஜகவை வீழ்த்துவதில் அக்கட்சி தோல்வியடைந்துவிட்டது என்று கூறியதோடு, காங்கிரஸை டிஎம்சியுடன் இணைக்க வேண்டும் என்றும், அதன் தலைவர் மம்தா பானர்ஜியின் தலைமையில் கைகோர்க்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் சில மூத்த தலைவர்கள் அழைப்பு விடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.