பிரதமர் மோடி அவர்களை டெல்லியில் இருந்து நீக்கவேண்டும் என நான் ஒருபோதும் கூறவில்லை என மம்தா பானர்ஜி அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.  இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல, நாங்கள் ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம் எனவும் அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது, ஆனால் இந்தியாவோ கொரோனாவுடன் சேர்த்து புயல்,  இந்திய எல்லையில் சீனா, பாகிஸ்தான் எதிர்ப்பு என  பன்முனை தாக்குதல்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில கடந்த வாரம் வங்கக் கடலில் உருவான ஆம்பல் புயலால் மேற்கு வங்கம், ஒரிசா, உள்ளிட்ட மாநிலங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனாவுடன் சேர்த்து புயல் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தள்ளப்பட்டுள்ளார். 

இந்நிலையில் ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளை மத்தியகுழு பார்வையிட்டு வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் சைபர் மற்றும் தகவல் செயலாளர் அனுஜ் சர்மா தலைமையிலான 7 பேர் கொண்ட குழு மேற்கு வங்கத்தில் மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளது. இரண்டு குழுக்களாக பிரிந்துள்ள நிலையில்,  ஒரு குழு தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பதர்பிரதிமாவுக்கு வருகை தந்துள்ளனர், மற்றொரு குழு, வடக்கு 24 பர்கானாவில் உள்ள சந்தேஷ்காலியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வருகிறது. இந்த மத்திய குழு சேதாரங்களை கணக்கிட்டு  பின்னர் மாநில அரசு அதிகாரிகளை சந்தித்து அவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் டெல்லி திரும்ப உள்ளது. இந்த புயல் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட  தென் வங்க மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரத்தில் பெரிய அளவில் சொத்து இழப்பு ஏற்பட்டுள்ளது , சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு சேதாரம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார், இந்நிலையில் மேற்கு வங்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி, நாங்கள் கொரோனா மற்றும் ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்டு கொண்டுவர நாங்கள் போராடி வருகிறோம், ஆனால் சில அரசியல் கட்சிகள் எங்களை பதவி விலகுமாறு  கூறிவருகின்றனர் இதுவரை பிரதமர் மோடியை டெல்லியில் இருந்து நீக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை, பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாங்கள் களத்தில் இறங்கி வேலை செய்துகொண்டிருக்கிறோம், இது அரசியலில் ஈடுபடுவதற்கான நேரம் அல்ல என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.