டெல்லிக்கு செல்வதறாகாக கொல்கத்தா விமான நிலையம் வந்த மம்தா பானர்ஜி அங்கு பிரதமர் மோடியின் மனைவி ஜசோதா பென்னை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

தொடர்ந்து,  ஜசோதா பென்னுக்கு கொல்கத்தா முதல்வர் மம்தா பானர்ஜி புடவை ஒன்றையும் பரிசளித்தார். ஒய்வு பெற்ற ஆசிரியரான ஜசோதா பென், மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள கல்யாணேஸ்வரி கோயிலில் வழிபட 2 நாள் பயணமாக வந்தார். தொடர்ந்து, வழிபாட்டை முடித்த அவர் மீண்டும் கொல்கத்தா வழியாக ஊர் திரும்புகிறார் என மேற்குவங்க முதல்வருக்கு நெருக்கமான வட்டாரங்கள் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளன. 

கொல்கத்தா விமான நிலையத்தில் நடந்த இச்சந்திப்பின் போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டதாகவும் இதைத் தொடர்ந்து ஜசோதா பென்னுக்கு மம்தா புடவை ஒன்றை பரிசளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்திக்க உள்ள மம்தா பானர்ஜி, மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள், நிலுவையிலுள்ள நிதியை பெறுதல் உள்ளிட்டவை குறித்து மோடியுடன் இன்று கலந்தாலோசிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக, நேற்று பிரதமர் நரேந்திர மோடியின் 69வது பிறந்தநாளையொட்டி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.  “பிரதமர் நரேந்திர மோடிஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மம்தா. மோடியுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த மம்தா பானர்ஜியின் இந்த திடீர் மாற்றம் மற்ற அரசியல் கட்சியினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.