மேற்கு வங்காளத்தில் ஒரு போதும் என்.ஆர்.சி. பட்டியலுக்கு அனுமதிக்க மாட்டோம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியாகத் தெரிவித்துள்ளார். 
அஸ்ஸாமில் சட்ட விரோத ஊடுருல்வகளைத் தடுக்கும் விதகாம என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் அஸ்ஸாம் மாநிலத்தில் தயாரிக்கப்பட்டது. சட்ட விரோதமாக ஊடுருவிய வெளிநாட்டவர்களைக் கண்டறியும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதைச் செயல்படுத்துவதில் உள் துறை அமைச்சர் அமித் ஷா உறுதியாக இருந்தார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் வெற்றிகரமாக இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய குடிமக்கள் பதிவேடு  நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படும் என்று அமித் ஷா அறிவித்தார். இதுதொடர்பாக ஜார்கண்ட் தேர்தல் பிரசாரத்தில் அமித் ஷா பேசுகையில், “அடுத்த நாடாளுமன்றத்துக்குள் இந்தப் பதிவேடு  நாடு முழுவதும் தயாரிக்கப்படும். இந்தியாவுக்குள் ஊடுருவிய ஒவ்வொருவரும் அடையாளம் காணப்பட்டு  வெளியேற்றப்படுவார்கள். ஆனால், அவர்களை வெளியேற்றாதீர்கள் என்று ராகுல் காந்தி கேட்கிறார். ஆனால், அடுத்த தேர்தலுக்குள் இந்தியாவில் சட்ட விரோதமாகக் குடியேறிய அனைவரும் வெளியே வீசப்படுவார்கள் என உறுதி அளிக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
அமித் ஷா நாடு முழுவது என்.ஆர்.சி. பதிவேடு நடத்த முடிவு செய்துள்ள நிலையில், இந்தத் திட்டத்துக்கு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி எதிர்ப்பு  தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் மம்தா பானர்ஜி பேசுகையில், “மேற்கு வங்காளத்தில் ஒரு போதும் என்.ஆர்.சி. பட்டியலுக்கு அனுமதிக்க மாட்டோம். சாதி மற்றும் மத அடிப்படையில் நீங்கள் என்.ஆர்.சி.யை செயல்படுத்த முடியாது” என்று மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.