அரசியல் சாசன பதவிகளில் உள்ளவர்கள் பாஜகவின் ஊதுகுழல்களாக செயல்படுகிறார்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காட்டமாக விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி முறிந்ததை அடுத்து சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சிகள் நடைபெற்றுவந்தன. ஆனால், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு கால அவகாசம் முடிவடைவதற்கு முன்பே, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி, மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், இந்த விவகாரம் பற்றி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார். 


‘‘பொதுவாகவே நான் அரசியல் சாசன பதவிகள் வகிப்பவர்கள் பற்றி எதுவும் பேசுவதில்லை. ஆனால், சிலர் பாஜகவின் ஊதுகுழல்களாக செயல்படுகிறார்கள். மேற்கு வங்காளத்திலும் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் உணர முடியும். அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக மற்றொரு அரசு நிர்வாகத்தை நடத்த விரும்புகிறார்கள்” ஆளுநர்கள் என்று குறீப்பிடமால மறைமுகமாக சாடி பேசினார் மம்தா பானர்ஜி.
மேலும் அவர் பேசுகையில், “மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி, இரண்டு அரசுகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. எனவே கூட்டாட்சி அமைப்பு, அரசியல் சாசனத்தின் அடிப்படையில்தான் செயல்பட வேண்டும். மாநில அரசுகள் செயல்பட அனுமதிக்க வேண்டும்” என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.