பேசிப் பேசியே அரசியலில் உச்சம் தொட்டவைதான் திராவிட இயக்கங்கள். அதன் ஒரு அங்கமான ம.தி.மு.க.வை பற்றிக் கேட்கவே வேண்டாம். அதன் பொதுச்செயலாளர் வைகோ ஒருவரே போதும், ஒட்டுமொத்த இயக்கத்துகும் சேர்த்து வைத்து இடி, மின்னல், கடும் மழையாய் பொழிய. 

ஆனாலும் அவ்வப்போது அவரது சகாக்களும் திட் திடீரென வாய் திறந்து வெளுத்தெடுப்பார்கள். அப்படித்தான் ம.தி.மு.க.வின் துணைப்பொதுச்செயலாளரான மல்லை சத்யா, ஆளும் அரசின் முக்கிய தலைகளை புரட்டி எடுத்திருக்கிறார். கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கிய மல்லை, அதே ஆக்‌ஷன் பிளாக்கை அரசியல் விமர்சனத்தையும் காட்டியிருக்கிறார் இப்படி...

“நடந்து முடிந்த நாடாளுமன்ற மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் பணத்தை வைத்துக் கொண்டு ஆளும் அ.தி.மு.க. அரசு முறைகேட்டில் பெரும் தாண்டவமாடி இருக்கிறது. அதிலும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில், இடைத்தேர்தல் தொகுதிகளில் ஓட்டுக்கு ரெண்டாயிரம் ரூபாயை வழங்கியுள்ளனர். சட்டபை இடைத்தேர்தலுக்கு ஒரு தொகுதிக்கு நாற்பது கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளனர். தேர்தல் என்றாலே ஆயிரங்கோடிகளை இப்படித்தான் இறக்கிவிடுகிறார்கள். 

நான் கேட்கிறேன், இவ்வளவு பணத்தை எங்கிருந்து கொண்டு வந்தீங்க, பாவிங்களா! ஏர் ஓட்டி, வியர்வை சிந்தி உழைச்சா கொண்டுவந்தீங்க? குறுக்கு வழியில் சம்பாதிச்ச பணத்தை வெச்சே குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க நினைக்கின்றனர். பணத்தைக் காட்டி வாக்குகளை விலைக்கு வாங்க நினைக்கும் இவர்களால், மக்களுக்கு எந்த நன்மையும் நடக்க போவதில்லை.” என்று சபித்துக் கொட்டியிருக்கிறார். 

இதற்குப் பதிலடியாக, ஆமை புகுந்த வீடு! சபிக்கப்பட்ட அரசியல் இயக்கம்! தரித்திர கட்சி! என்றெல்லாம் ம.தி.மு.க.வை சாடித் தள்ளியிருக்கின்றது ஆளுங்கட்சியின் ஐ.டி.விங்க்.