தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. வரும் மே மாதத்தில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கியுள்ளது. கமல் கட்சிக்கு தமிழகத்தில் பேட்டரி டார்ச் சின்னத்தை தேர்தல் சின்னம் ஒதுக்கவில்லை. ஆனால், அதையெல்லாம் கவலைப்படாமல் கமலஹாசன் தென் மாவட்டங்களில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் சிவகாசியில் இன்று தேர்தல் பிரசாரத்தில் கமல் ஈடுபட்டார்.

 
அப்போது அவர் பேசுகையில், “மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் எங்களுடைய சொத்து. அவருடைய மடியில் அமர்ந்து வளர்ந்தவன் நான். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மதத்தால் பிரிவினை செய்பவர்களுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். தேர்தல் வருவதால், பணத்தை எடுத்துகொண்டு வருவார்கள். அவர்கள் ஓட்டுக்கு 5 ஆயிரம் பணம் தந்தால், வாங்காதீர்கள். அதற்கு பதிலாக ரூ.5 லட்சமாக கேளுங்கள். நான் ஓட்டுப் போட பணம் தர மாட்டேன். ஆனால், நான் வெற்றி பெற்றால் இதே சிவகாசி சாலையில் அங்கபிரதட்சணம் செய்வேன்” எனத் தெரிவித்தார்.