வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், விசிக, இடது சாரிகள், மதிமுக, ஐஜேகே, கொமதேக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் மதச் சார்பிற்ற முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் போட்டியிடுகிறது.
 
அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, தமாகா உள்ளிட்ட கட்சிகள் ஒரு கூட்டணியாக போட்டியிடுகிறது. இதே போல் டி.டி.வி.தினகரனின் அமமுக, எஸ்டிபிஐ கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறது.

இந்நிலையில் 40 தொகுதிகளிலும் தனியாக போட்டியிடுவதாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அறிவித்திருந்தது. அதற்கான வேட்பாளர் நேர்காணல் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் செ.கு.தமிழரசன் தலைமையிலான இந்திய குடியரசு கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

இன்று  மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கமலஹாசனை செ.கு.தமிழரசன் சந்தித்து பேசினார். அப்போது மக்கள் நீதி மய்யம் மற்றுத் இந்திய குடியரசுக் கட்சி இடையே தேர்தல் உடன்பாடு ஏற்பட்டது.

இதில் ஒரு மக்களவைத் தொகுதியிலும், இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளில் மூன்றிலும் இந்திய குடியரசு கட்சி போட்டியிடுவதற்கு மக்கள் நீதி மையம் வாய்ப்பளித்துள்ளதாக செ.கு.தமிழரசன் தெரிவித்துள்ளார்.அதிமுக பாஜகவுடன் கூட்டு வைத்திருப்பதை நாங்கள் ஏற்கவில்லை.

இதனால் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம் என்றும், .இந்தக் கூட்டணியில் இந்திய குடியரசு கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் மக்கள் நீதி மய்யத்தின் சின்னமாக பேட்டரி டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் செ.கு.தமிழரசன் தெரிவித்துள்ளார்.


தற்போது அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் தமிழரசன் தெரிவித்துள்ளார்.

இந்திய குடியரசுக் கட்சி செ.கு,தமிழரசன் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தவரை அவர் சொல்வதெல்லாம் கேட்டுக் கொண்டு அவருக்கு முழு ஆதரவு அளித்து வந்தார்.