Maitreyan has filed a petition to Rajya Sabha Secretary Deepak Verma seeking removal of Dinakaran supporting the Rajya Sabha MPs.
தினகரன் ஆதரவு மாநிலங்களவை எம்பிக்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்ய கோரி மாநிலங்களவை செயலாளர் தீபக் வர்மாவிடம் மைத்ரேயன் மனு அளித்துள்ளார்.
அதில், எம்.பிக்கள் விஜிலா சத்யானந்த் , நவநீத கிருஷ்ணன், கோகுல கிருஷ்ணனை ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரைத் தகுதி நீக்கம் செய்து அதிர்ச்சி கொடுத்ததுபோலவே, தினகரன் பின்னால் இருக்கும் எம்.பிக்களின் பதவிகளுக்குச் சிக்கலை ஏற்படுத்தி தினகரனுக்கு நெருக்கடி கொடுக்க எடப்பாடி தரப்பு தயாராகிவருகிறது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஒருவழியாக ஆட்சியை கைப்பற்றிய எடப்பாடி தற்போது கட்சியையும் தங்கள் பக்கம் நிரந்தமாக தக்க வைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
இதனிடையே டிடிவி தினகரன் தன்னிடம் இருந்த எம்.எல்.ஏக்களை வைத்து எடப்பாடிக்கு ஆட்டம் காண்பித்தார். ஆனால் எடப்பாடி அதிரடியாக டிடிவி பின்னால் இருந்த 18 பேரின் எம்.எல்.ஏக்கள் பதவியையும் காலி செய்தார்.
இதையடுத்து ஓவராக கூச்சலிட்டு வந்த டிடிவி தரப்பினர் சற்று அடக்கி வாசிக்க தொடங்கினர். இந்நிலையில், கடந்த 23 ஆம் தேதி இரட்டை இலை குறித்து தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற விசாரணையில், தினகரன் அணியினர் இரண்டு புகார் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடைபெற்றபோது, தினகரன் அணியைச் சேர்ந்த எம்.பி நவநீதகிருஷ்ணன் கலந்துகொண்டது எடப்பாடி தரப்புக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அடுத்தகட்டமாக எம்.எல்.ஏக்களை தூக்கியது போலவே எம்.பிக்களையும் காலி செய்ய வேண்டும் என எடப்பாடி டீம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அதற்கு ஏதுவாக தினகரன் ஆதரவு மாநிலங்களவை எம்பிக்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்ய கோரி மாநிலங்களவை செயலாளர் தீபக் வர்மாவிடம் மைத்ரேயன் மனு அளித்துள்ளார்.
தற்போது தினகரன் பின்னால், நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த், கோகுல கிருஷ்ணன், உதயக்குமார், செங்குட்டுவன், நாகராஜ் ஆகிய ஆறு உறுப்பினர்கள் உள்ளார்கள்.
