நேற்று மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் முதலாவது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. திமுக சார்பில் அமைதி ஊர்வலம், சிலை திறப்பு விழா, பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் அதிமுக முக்கிய தலைவர்களில் ஒருவரான மைத்ரேயன் தனது முகநூல் பதிவில் கருணாநிதிக்கு  புகழாரம் சூட்டியிருந்தார். ஒன்றரை ஆண்டு இடைவெளியில் தமிழக அரசியலின் இருபெரும் அசைக்க முடியாத சக்திகள் நம்மை விட்டு எட்டாத தூரம் சென்று விட்டதாக ஜெயலல்தா மற்றும் கருணாநிதியின் இறப்பு குறித்து கவலை தெரிவித்திருந்தார்.

அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு கருணாநிதியின்  முதலாம் ஆண்டு நினைவு நாளில் அவருக்கு எனது இதயபூர்வமான அஞ்சலி என்று பதிவிட்டுள்ளார்.

மைத்ரேயன் கடந்த மக்களவைத் தேர்தலின்போது தென் சென்னை தொகுதியில் தனக்கு சீட் கிடைக்கும் எதிர்பார்த்திருந்தார். அதே நேரத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியாவது கிடைக்கும் என மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தார். அநத் ஆசையிலும் மண் விழுந்தது.

தனக்கு தென்சென்னையில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் அல்லது மாநிலங்களவை உறுப்பினர் பதவியாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்ததாகவும், அது கிடைக்காதது வருத்தமளிப்பதாகவும்  ஒரு பேட்டியில் மைத்ரேயன் தெரிவித்திருந்தார்.

ஆனால் பதவிக் கிடைக்கவில்லை என்பதற்காக அழக்கூடாது அமைச்சர் ஜெயகுமார் வேறு கிண்டல் செய்திருந்தார். இதனால் கடும் விரக்தியில் இருந்த மைத்ரேயன்  கருணாநிதியின்  முதலாமாண்டு நினைவு தினத்தை நினைவுகூர்ந்து அதிமுகவிலிருந்து யாரும் கருத்து தெரிவிக்காத நிலையில் மைத்ரேயன் இவ்வாறு தெரிவித்துள்ளது அவர் திமுக பக்கம் சாய்கிறார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.