மகேந்திரன் வெற்றியை எந்த கொம்பனாலேயும் தடுக்கமுடியாது: தொடைதட்டும் தொண்டாமுத்தூர், வெளுத்து வாங்கும் அமைச்சர் வேலுமணி!

யுத்தத்தில் பிரம்மாஸ்திரம் மிக முக்கியமானது. எல்லா பானங்களும் பெரிதாய் கைகொடுக்காவிட்டாலும் கூட இறுதியாய் ஏவப்படும் இந்த பிரம்மாஸ்திரம் அப்படியே எதிரியை சாய்த்துவிட்டால், வெற்றி வெகு எளிதாய் வசப்படும். 

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க.வினர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் கையில்தான் அந்த பிரம்மாஸ்திரம் இருக்குது என்கின்றனர்! அது என்ன தெரியுமா?...

எஸ்.பி.வேலுமணியின் சொந்த தொகுதியானது கோயமுத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் ஆகும். பொள்ளாச்சி நாடாளுமன்றத்தில் அடங்கும் ஆறு சட்டசபைகளில் இறுதியாய் இருப்பது இந்த சட்டசபைதான். லிஸ்டில்தான் இறுதி! ஆனால் அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றியை இதுதான் செய்கிறது உறுதி. அதனால்தான் இந்த தொகுதியை பிரம்மாஸ்திரம் என்று சொல்லி தலையில் வைத்துக் கொண்டாடுகின்றனர் ஆளுங்கட்சியினரும், அதன் கூட்டணியினரும். 
காரணம்?...அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதியை முழுக்க முழுக்க தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். கட்டுப்பாடென்றால் கடாமுடாத்தனம் செய்து அடக்கி வைப்பதில்லை. மக்கள் நல திட்டங்களை அள்ளி வீசி தொகுதி  மக்களை அன்பால் அரவணைத்து வைப்பதுதான். முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த இந்த தொகுதியானது பார்ப்பதற்கே பச்சைப் பசேலென அத்தனை அழகானது. மலைகள், வனம், ஆறுகள், அருவி என இயற்கையின் முக்கிய பல வடிவங்கள் இந்த தொகுதிக்குள் வருகின்றன.


 
பொதுவாக விவசாய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக பெரிதாய் எந்த அரசியல் தலைவர்களும் மெனெக்கெடுவதில்லை. ஆனால் தொண்டாமுத்தூரைப் பொறுத்தவரையில் இது விதிவிலக்குதான்.  மலைப்பகுதியின் உள் கிராமங்களுக்கு கூட அருமையான சாலைகள், சிறிய ஓடைகளுக்கு கூட பாலங்கள், மெகா ஆறுகளுக்கு பெரிய பாலங்கள், கிட்டத்தட்ட நூறு சதவீதம் வீதிகளுக்கு தெருவிளக்குகள், பூங்காக்கள், மலை வன கிராம குழந்தைகளுக்கும் போதுமான பள்ளிக்கூடங்கள், ரேஷன் கடைகள், விளை பொருட்களை எடுத்துச் செல்ல பேருந்து வசதி...என்று மனிதர் பார்த்துப் பார்த்து செய்து வைத்திருக்கிறார் வசதிகளை. 

இவையெல்லாம் இன்று நேற்றல்ல, கடந்த 2011 தேர்தலுக்கு பிறகு இருந்தே தொண்டாமுத்தூர் தொகுதியின் முகமே தேஜஸாக மாறித்தான் நிற்கிறது. மற்ற தொகுதி மக்கள் பொறாமைப்படும் வகையில்தான் இந்த தொகுதியில் அடிப்படை பணிகளின் நிறைவு இருப்பதால் இந்த பகுதி மக்களுக்கு ஒரே குஷிதான். எனவே கிட்டத்தட்ட மிகப் பெரும்பான்மையான வாக்கு வங்கி அ.தி.மு.க.வைதான் ஆதரிக்கிறது. 
இதுபோதாதென்று வருடாவருடம் தீபாவளி, தைப்பொங்கலுக்கு தொகுதியின் ஏழை எளியமக்களுக்கு தன்னால் இயன்ற சிறு அன்பளிப்பு, கல்யாணத்தில் துவங்கி காது குத்து வரை நிதியுதவி, கோயில் விழாக்களுக்கு நன்கொடை...என அள்ளிக் கொடுத்து தொகுதி மக்களை தன் அன்பு அரவணைப்பில் வைத்துள்ளார் வேலுமணி.

அதனால் இந்த நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரான மகேந்திரனுக்கு இந்த வாக்கு வங்கி அப்படியே அல்வா போல் கைகொடுக்கும். மற்ற 5 தொகுதிகளிலும் அவருக்கு வாய்ப்பு அருமையாகத்தான் இருக்கிறது. ஐந்து ஆண்டுகளில் அவர் செய்திருக்கும் நன்மையால் தி.மு.க. வாக்கு வங்கியினர் கூட இந்த முறை அவரை ஆதரிக்க தயாராக இருக்கும் நிலையில், தொண்டாமுத்தூரில் லட்டு போல் வாக்குகள் கொத்துக் கொத்தாய் வந்து சேரும் என்பதே அ.தி.மு.க.வின் உறுதியான கணக்கு. 

இதனால்தான் ‘அமைச்சர் வேலுமணியின் தொண்டாமுத்தூர் பிரம்மாஸ்திரம் இருக்கையில் மகேந்திரனின் வெற்றியை எந்த கொம்பனாலும் தடுக்க  முடியாது.’என்று தொடை தட்டி சவால் விடுகின்றனர். ஹும், கவனிப்போம்.