நாளுக்கு நாள் மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்று  அதிகரித்து வரும் நிலையில், தொற்றுநோய்க்கு எதிரான போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் ஒன்றிணைந்தால் நிச்சயம் இத்துன்பத்திற்கு எதிரான நாம் வெற்றியை அடைய முடியும் என்றும்  மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.  நாட்டிலேயே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரமே முதலிடத்தில் உள்ளது.  இதுவரை அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,11,987 ஆக உயர்ந்துள்ளது.   மும்பையில் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக குடிமை அமைப்பு மற்றும் டாடா குழுமம் இணைந்து செயல்படுத்தும் 'பிளாஸ்மா திட்டத்தின் கீழ்' 20 ஆம்புலன்ஸ், 100 வென்டிலேட்டர்கள் மற்றும் ரூ .10 கோடியை பிரஹன்மும்பை மாநகராட்சிக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி திங்கட்கிழமை நடைபெற்றது, அப்போது அதில் கலந்துகொண்டு பேசிய உத்தவ் தாக்கரே,

  

மாநிலத்தில் கொரோனா வைரஸ் நெருக்கடியை சமாளிக்க தனது அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றார். மேலும் "கொரோனா வைரஸ் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவருவதில் நாங்கள் அனைவரும் உறுதியாக இருக்கிறோம். குடிமக்களும் பெரிய தொழில்முனைவோரும் அரசாங்கத்துடன் தோளோடு தோள் நின்று போராடி வருகின்றனர். அனைவரும் அயராது உழைக்கின்றனர், இதுவே வெற்றியை உறுதி செய்யும்" என்று தாக்கரே கூறினார். கொரோனா வைரஸ் போன்ற ஒரு நெருக்கடியில், பல அமைப்புகளும் தனிநபர்களும் சமூகத்தில் இருந்து தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவ முன்வந்துள்ளனர் என்று முதல்வர் கூறினார். டாடா குழுமம் ஆரம்பத்தில் இருந்தே மாநில அரசுடன் முழு பலத்துடன் நிற்கிறது, என்றார். மகாராஷ்டிராவின் சுற்றுலா அமைச்சரும் மும்பை புறநகர் மாவட்டத்தின் பாதுகாவலருமான ஆதித்யா தாக்கரே, முதல் நாளிலிருந்து கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது என்றார். 

மும்பை நகர மாவட்டத்தின் பாதுகாவலர் அமைச்சர் அஸ்லம் ஷேக் கூறுகையில், கொரோனா வைரஸிலிருந்து விடுபட அச்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், மகாராஷ்டிரா விரைவில் கோவிட் -19 இலிருந்து விடுபடும் என்றார், இந்நிகழ்ச்சியில் பேசிய மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் 6000 லிட்டர் பிளாஸ்மாவை சேமித்து வைத்திருக்கும் பி.எம்.சி-களின் சொந்த பிளாஸ்மா மையத்தை புதுப்பிக்க முதலமைச்சர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறினார். மகாராஷ்டிராவில் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள ஹோட்டல்கள் ஜூலை 8 முதல் 33%   திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார். கூட்டு நகராட்சி ஆணையர் அசுதோஷ் சலீல் கூறுகையில், மும்பையில் கோவிட் -19 படுக்கைகளின் எண்ணிக்கை மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்த 3,500 என்ற எண்ணிக்கை தற்போது 14,000 ஆகவும், ஐ.சி.யூ படுக்கைகளின் எண்ணிக்கை மார்ச் நடுப்பகுதியில் 191 ல் இருந்து 1,450 ஆகவும் அதிகரித்துள்ளது. நகரத்தின் நோயாளிகள் மீட்பு விகிதம் 66% ஆக அதிகரித்துள்ளது என்றார்.