மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தை நாட சிவசேனா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனை 56 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாஜக - சிவசேனை கூட்டணி, ஆட்சி அமைப்பதற்குத் தேவையான இடங்களில் வெற்றி பெற்ற போதிலும் ஆட்சியில் சமபங்கு, சுழற்சி முறையில் முதல்வர் பதவி ஆகிய பிரச்சனைகளில் உடன்பாடு எட்டாததால் அங்கு அரசு அமைவதில் இரு கட்சிகளுக்கிடையே இழுபறி நீடித்தது.

இதையடுத்து, தேவேந்திர பட்னவிஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவை ஆட்சி அமைக்குமாறு மாநில ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை தங்களிடம் இல்லை என பாஜக ஆளுநரிடம் தெரிவித்துவிட்டது. இதையடுத்து, இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள சிவசேனாவை ஆட்சி அமைக்குமாறு மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, அழைப்பு விடுத்தார்.

ஆட்சி அமைப்பதற்கான ஆதரவை திரட்டும் முயற்சியில் சிவசேனா நேற்று ஈடுபட்டது. தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், இருகட்சிகளும் தங்களது ஆதரவு நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், சிவசேனா தலைவர்கள் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். சந்திப்பின் போதும் ஆட்சி அமைப்பதற்கு கூடுதல் கால அவகாசத்தை வழங்குமாறு அவர்கள் வலியுறுத்தினர். ஆனால், ஆதரவு எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதம் கொடுக்கப்படவில்லை எனக் கூறி கூடுதல் அவகாசம் வழங்க ஆளுநர் மறுத்துவிட்டார்.

இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆளுநர் பகத் சிங் கோஷாரி நேற்றிரவு 8.30 மணியளவில் அழைப்பு விடுத்தார். தேசியவாத காங்கிரஸ் தலைவர்களும் நேற்றிரவே ஆளுநரை சந்தித்தனர். அப்போது, இன்றிரவு 8.30 மணி வரை ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஆளுநர் நேரம் வழங்கினார். இந்நிலையில் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உச்சநீதிமன்றத்தை அணுகுவது குறித்து அகமது பட்டேல், கபில் சிபலுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.