அரசியல் வனத்தில் கருணாநிதியால் விதைக்கப்பட்டு, முளைத்து, சிறிய செடியாக வளர்ந்து நின்றார் மு.க.ஸ்டாலின். அந்தப் பருவத்தில் அவரது தலையில் பூட்ஸ் காலை வைத்து அழுத்தி நசுக்கியது தமிழக போலீஸ். காரணம், எமெர்ஜென்ஸியில் அவர் சிறைப்பட்டு இருந்ததுதான்.

”சிறையில் ஸ்டாலின் அனுபவித்த சித்ரவதைகள் வீடியோவாக்கப்பட்டு அதை இப்போது காணும் வாய்ப்பை பெற்றால், அதிரும் எடப்பாடி ‘அரசியல் இவ்வளவு கஷ்டமானதாண்ணே?’ என்றபடி தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஸ்டாலினுக்கு வழிவிட்டுடுவார்.” என்று சொல்லி விரக்தியாக சிரிக்கிறார்கள் தி.மு.க.வின் பெரும் புள்ளிகள்.

எமெர்ஜென்ஸியில் அடைபட்டுக் கிடந்த ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு சிறையில் உணவாக கூழும், களியும் கொடுத்தனர் துவக்கத்தில். அதன் பின் சோறும், குழம்பும் கொடுத்தனர். ஆனால் சோற்றில் வேப்ப எண்ணெய் ஊற்றப்பட்டும், சாம்பாரில் உப்பு அள்ளிக் கொட்டப்பட்டும் பரிமாறப்படுவதுதான் அவலம்.

நாடெங்கிலும் அவசரநிலை பிரகடனப்பட்டுக் கிடந்தாலும் கூட தமிழகத்தில்தான் சிறைகள் சித்ரவதை கூடங்களாக இருந்தனவாம். மற்ற மாநிலங்களில் சிறை அதிகாரிகள், காங்கிரஸுக்கு எதிர்கட்சியினரை கைது செய்து வைத்திருந்தாலும் கூட அவர்களிடம் மனிதாபிமானத்தோடே நடந்தனராம்.

உடல் அளவிலான சித்ரவதைகள் இப்படி நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் மன அளவிலான சித்ரவதை தருதலின் உச்சம் தொட்டது சிறை அதிகாரிகள் குழு.
அதாவது ஒரு நாள் மகாலிங்கம் எனும் சிறை வார்டன் இவர்கள் அடைபட்டுக் கிடந்த 9-ம் நம்பர் பிளாக்கின் ஒவ்வொரு செல்லாக வந்தாராம். ஒவ்வொருவருக்கும் இரண்டு வெள்ளை பேப்பர்களை கொடுத்தாராம். அதில், ‘இந்த தாளில் நீங்கள் தி.மு.க.விலிருந்து விலகிவிட்டீர்கள், இனி உங்களுக்கும் அந்த கட்சிக்கும் தொடர்பில்லை என எழுதி கொடுங்கள். இதெல்லாம் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் உங்களை விடுதலை செய்வார். இதற்கு மறுத்தால் சிறையில் பட்டினி கிடந்தே சாக வேண்டியிருக்கும். உங்கள் குடும்பங்கள் இருட்டிலிருந்து மீளவே முடியாது.’ என்றாராம்.

குறிப்பாக ஸ்டாலினிடம்தான் மீண்டும், மீண்டும் மகாலிங்கம் அந்த கடிதத்தை கேட்டாராம். ஆனால் எவ்வளவு வருந்திக் கேட்டும் ஸ்டாலின் அப்படி எழுதி தரவில்லை.
இதன் விளைவாக ஸ்டாலின் உள்ளிட்டோரை சிறை கண்காணிப்பாளர், தன் அறைக்கு வரச்சொல்லி தானும், சக காவலர்களுமாய் சேர்ந்து தினமும் அடி துவைத்தெடுப்பாராம். அதன் பிறகு ஸ்டாலினுக்கு தண்ணீர் கூட சிறை கம்பியின் வழியாக ஊற்றப்பட்டதாம்.

இந்த கொடுமையெல்லாம் இன்றைய தி.மு.க.வில் பெரும் வசதி வாய்ப்புடன் கோலோச்சும் புள்ளிகளுக்கு கூட தெரிந்திராத விஷயமென்பதுதான் மேட்டரே!