தமிழகத்தில்  இன்று ஒரே நாளில் 2710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழகத்தில் மொத்த பாதிப்பு 62087 ஆக உயர்ந்துள்ளது. குணமானவர்களின் எண்ணிக்கை 34112ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரைக்கும் பலி எண்ணிக்கை 749 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் ஒரே நாளில் 37பேர் பலியாகி இருக்கிறார்கள்.மதுரையில் இதுவரைக்கும் 849 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார்கள்.மக்களிடம் சுயகட்டுப்பாடு என்பது சுத்தமாகவே இல்லை. எனவே வர்த்தக சங்கங்கள் தாமாகவே முன்வந்து நேரக்கட்டுப்பாடு தங்களுக்குள்ளாகவே விதித்திருக்கிறார்கள். இதுயெல்லாம் கொரோனா தொற்று குறைவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.

 மதுரையில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.  மதுரை மாவட்டத்தில் 350க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  மதுரையில் நூற்றுக்கணக்கானோருக்கு அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.  மதுரையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 849 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனோ பரவலை கட்டுப்படுத்த, தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரையில் பத்து பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.  இந்த பறக்கும் படை, நகரில் உள்ள கடைகள் முறையாக நேரக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கிறதா? என கண்காணிக்கும் பணியில் ஈடுபடும்.

கட்டாய முகக்கவசம், சமூக விலகல் ஆகியவை கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை இந்த குழுவினர் கண்காணிக்க உள்ளனர். தொற்றில் இருந்து காத்து கொள்ளும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நபர்கள் மீது, பறக்கும் படை கடும் நடவடிக்கை எடுக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மக்களிடையே எச்சரிக்கை உணர்வு இல்லாத சூழலில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  மதுரை மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரி தர்மேந்திர பிரதாப் மாற்றப்பட்டு  அவருக்கு பதிலாக புதிய கொரோனா தடுப்பு அதிகாரியாக சந்திர மோகன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.  தர்மேந்திர பிரதாப் ராமநாதபுரம் மாவட்ட கொரோனா தடுப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.