"மதுரை ஸ்மார்ட் சிட்டி" நான்காண்டுகளில் நத்தை வேகத்தில் நகர்ந்துள்ளது எனவும், 14 திட்டங்களில் ஒன்று மட்டுமே முடிந்துள்ளது என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார். மேலும் திட்டத்தை வேகப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். நாடாளுமன்றத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அளித்த பதிலில் மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் நத்தை வேகத்தில் நகர்வது வெளிப்பட்டுள்ளது. 

சு. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சர்(தனி) ஹர் தீப் சிங் பூரி அளித்துள்ள பதிலில், செப் 2016 ல் அறிவிக்கப்பட்ட இரண்டாவது சுற்றில் மதுரை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இணைக்கப்பட்டது. 977.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட 14 திட்டங்களில் ரூ 12 கோடி செலவிலான ஒரு திட்டம் முடிந்துள்ளது. பாரம்பரிய வழிகள், தெருக்களின் வடிவம், பெரியார் பேருந்து நிலைய மறு மேம்பாடு, சுற்றுலா வசதிகள், வைகை ஆறு மேம்பாடு,  மாநில அளவிலான தகவல் தொழில் நுட்ப கட்டுப்பாட்டு மையம், மண்டலம் 1,2,3, 4 ஆகியவற்றின் தெரு விளக்கு நவீனமயம், பல் தட்டு கார் நிறுத்தம், தண்ணீர் அளிப்பு பகிர்வு, முல்லைப் பெரியார் அணையில் இருந்து மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு தண்ணீர் அளிப்பு மேம்பாடு, தமுக்கம் மைதானத்தில் கலையரங்கம், புதிய விரிவாக்கப் பகுதிகளில் பாதாள சாக்கடை ஆகிய ரூ 965.55 கோடி மதிப்பீட்டிலான திட்டங்கள் துவங்குவதற்கான வேலை ஆணை வழங்கப்பட்டுள்ளது. 

இவை 5 ஆண்டுகளில் முடிவடையுமென எதிர்பார்க்கிறோம். பழச் சந்தையில் கட்டுமான மற்றும் அடிப்படை வசதிகள் என்கிற ரூ 12 கோடி திட்டம் நடந்து முடிந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார். இது குறித்து சு.வெங்கடேசன் கருத்து தெரிவிக்கையில், 4 ஆண்டுகளில் ஸ்மார்ட் சிட்டி நகர்ந்துள்ள வேகம் போதுமானதல்ல. ஒரே ஒரு திட்டம் மட்டுமே முடிந்துள்ளது. மற்ற திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். இது குறித்து எல்லா மட்டங்களிலும் முயற்சிகளை எடுத்து வருகிறேன். அமைச்சக மட்டங்களிலும் தொடர்ந்து மாமதுரை வளர்ச்சிக்கான பணி தொய்வின்றி நடந்தேற தொடர்ந்து முனைப்போடு குரல் கொடுப்பேன்" என்றார்.