தப்பி ஓடி வந்த மதுரை தெற்கு எம்.எல்.ஏ சரவணன் , எம்பி முத்துகிருஷ்ணன் ஆகியோர் ஓபிஎஸ்சிடம் அடைக்கலமாகினர்.
அதிரடி சரவெடிகளை இன்று மதியமும் மாலையும் , பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிகழ்த்தி காட்டினார் சசிகலா. பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஒவ்வொரு முறையும் , மிகத்தெளிவாகவும், தீர்க்கமாகவும் அதே நேரத்தில் மிரட்டல் தொணியிலும் வெடியாய் வெடித்தார்.
போதாதகுறைக்கு மூன்றாவது நாளாக 77 கி,.மீ தொலைவில் உள்ள கூவத்தூருக்கு சென்று ஆதரவு எம்.எல்.ஏக்களை சந்தித்ததோடு, இரவு அங்கேயே தங்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
இவ்வளவு களேபரங்களுக்கு இடையிலும், கடந்த ஐந்து நாட்களாக அங்கு சிறைவைக்கப்பட்டிருந்த மதுரை தெற்கு தொகுதியின் எம்.எல்.ஏ சரவணன் தப்பி ஓடி வந்துள்ளார்.
‘கோல்டன் பே’ ரிசார்ட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் ,அத்தனை காவலையும் மீறி, சரவணன் தப்பி வந்தது தான் ஹைலைட்.
காரணம் கோல்டன் பே ரிசார்ட் என்பது தீபகர்ப வடிவில் மூன்று புறம் தண்ணீரால் சூழப்பட்டு ஒருபுறம் மட்டுமே நிலப்பகுதியை கொண்டதாகும். அங்கிருந்து மதுரை தெற்கு எம்.எல்.ஏ தப்பி வந்தது சாகசமே.
சரவணன் தப்பித்து ஓடிவந்துள்ளார். இதனால் ஓபிஎஸ்சுடன் சேர்த்து அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது. இதனால் சசிகலா ஆதரவு அவர்கள் கணக்கின் படி 126 ஆக குறைந்துள்ளது.
மேலும் ஒரு அதிர்ச்சியாக மதுரை தொகுதியின் எம்பி கோபால கிருஷ்ணன் ஓபிஎஸ்சிடம் அடைக்கலம் ஆகியுள்ளார். இதனால் ஓபிஎஸ்சுக்கு ஆதரவளிக்கும் எம்பிக்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
எம்பிக்களின் பெரும் தலையாக பார்க்கப்படும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அதிமுக துணை தலைவர் வேணுகோபால் ஆகியோரும் ஓபிஎஸ்சிடம் சரணடைவது உறுதியாகிவிட்டது.
