ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ்.. சசிகலாவிடையே கடும் மோதல் ஏற்பட்டது. முதலமைச்சர் பதவியை பிடிக்க சசிகலாவும். ஓபிஎஸ்ம் முட்டி மோதிக் கொண்டனர்.

இதனிடையே சொத்துக் குவிப்பு வழக்கில் சசிசலாவுக்கு தண்டனை கிடைத்ததையடுத்து அவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனாலும் சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக நியமித்து சென்றார்.

இந்நிலையில் சசிகலவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் எம்எல்ஏக்களுக்கு தொகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தங்களது கருத்துக்களை கேட்டுவிட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கி தொகுதிப்பக்கம் வராமல் ஜாலியாக இருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் தங்கள் தொகுதிகளில் எம்எல்ஏக்களுக்கு எதிராக பேனர் வைத்து எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இதனிடையே மேட்டூர் தொகுதி எம்எல்ஏ செம்மலை கூவத்தூரில் இருந்து வந்து ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்தார். இதேபோன்று கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் கூவத்தூரில் இருந்து மாறுவேடத்தில் தப்பி வந்தார். உடனடியாக அவர் ஓபிஎஸ்ஐ சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

இந்நிலையில் மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணன், இன்று சென்னையில் இருந்து மதுரை வந்தபோது அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அரசமரம் பிள்ளையார் கோவில் பகுதியில் பொதுமக்கள் மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும் தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர். பொதுமக்கள் அவரை தோளில் தூக்கி வைத்து கொண்டாடினர்.

பல்வேறு வீதிகள் வழியாக ஊர்வலமாக சுற்றி வந்த சரவணன், தொகுதி அலுவலம் சென்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதே எனது பணி. மக்கள் ஆதரவு அளித்தததால் நானும் ஓ.பி.எஸ்.,சுக்கு ஆதரவு அளித்தேன் என்றார்.

எடப்பாடி பழனிசாமி அரசு நீடிக்குமா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவேன் என்று சரவணன் தெரிவித்தார்.