மதுரையில் மீனாட்சியம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.

மதுரையில் மீனாட்சியம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.

மதுரையில் சித்திரைத் திருவிழா கடந்த 8ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இருவேளைகளிலும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வந்து அருள்பாலித்தார். மீனாட்சி அம்மனுக்கு நேற்று முன்தினம் பட்டாபிஷேகம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சியம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று காலை 10மணியளவில் நடைபெறுகிறது. இதனை நேரில் காண்பதற்காக ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலில் திரண்டுள்ளனர். திருக்கல்யாணத்தைக் காண மொத்தம் 13 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, 3200 பேர் கட்டணமில்லா தரிசனத்திலும் 6800 பேர் ரூ 200, ரூ 500 கட்டணத்திலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கோவில் வெளி பிராகாரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்களுக்கான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இந்து அறநிலையத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தைச் சுற்றி திருக்கல்யாண விழாவைக் காணொளியில் காணும் வகையில் 20 அகண்ட எல்.ஈ.டி ஒளித்திரை அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 2500 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் கோவிலைச் சுற்றி 100 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களும், 9 கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான தேரோட்ட விழா நாளையும், கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு வரும் 19ம் தேதியும் நடைபெறவுள்ளது.