தேர்தல் அறிவித்திருக்கும் தேதியன்று புகழ்பெற்ற சித்திரை திருவிழா நடப்பதால் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் அதனால் வாக்களிக்க மக்களுக்கு சிரமம் ஏற்படும். எனவே தேர்தலைத் தள்ளிவைக்கவேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதேபோல காலியாக உள்ள 21 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. மூன்று தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் தற்போது நடைபெறவில்லை.

இதனிடையே மதுரையின் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா, இந்தாண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏப்ரல் 7-ஆம் தேதி மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில், முக்கிய வைபவமான தேரோட்டம் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மதுரை சித்திரை திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் தேர்தல் நாளன்று இந்தாண்டு சித்திரை திருவிழா வருவதால், மக்களால் எப்படி வாக்களிக்க முடியும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து சித்திரை திருவிழா தொடர்பான விவரங்களை இன்றைக்குள் தாக்கல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இந்நிலையில், மதுரையில் மக்களவை தேர்தலை தள்ளி வைக்க கோரி வழங்கறிஞர் பார்த்தசாரதி என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். அப்போது தேர்தல் அறிவித்திருக்கும் தேதியன்று புகழ்பெற்ற சித்திரை திருவிழா நடப்பதால் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் அதனால் வாக்களிக்க மக்களுக்கு சிரமம் ஏற்படும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து வழங்கறிஞர் முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணை நடத்தப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மதுரை ஆட்சியர் தலைமையில் நடந்த அவரசரக் கூட்டத்தில் சித்திரைத் திருவிழா நடக்கும் அதே தேதியில் தேர்தலும் நடத்தப்பட்டால் மிக அதிகமான அளவில் காவல் துறையினர் பாதுகாப்புக்காக தேவைப்படுவர் என்றும் ஆனாலும் கூட்டத்தை சமாளிப்பது சிரமமே என்றும் காவல் ஆணையர் டேவிட்சம் தேவாசீர்வாதம்  கூறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சற்றுமுன்னர் மதுரை கலெக்டரிடம் தேர்தலைத் தள்ளிவைக்கும்படி அனைத்துக்கட்சிகளும் இணைந்து கோரிக்கை மனு கொடுக்க முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து அவசரமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த கலெக்டர் நடராஜன்,’’இந்தியத் தேர்தல் உள்ளூர் விடுமுறை பற்றிய விபரம் மட்டுமே கேட்டிருந்ததால் 19.04.2019 அன்று உள்ளூர் விடுமுறை என்பதை அறிவித்திருந்தோம். தற்போது பாதுகாப்பை பலமடங்கு அதிகப்படுத்துவது குறித்தும், தேவைப்பட்டால் வாக்குப் பதிவு நேரங்களை அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும்’ என்றும் தெரிவித்தார்.