'வீரத்துக்கு மட்டுமில்லடா ஈரத்துக்கும் பேர்போனது எங்க மதுரை மண்ணு என்று மதுரைக்காரர்கள் பெருமைபொங்க மார்தட்டிக் கொள்ளவேண்டியதுதான் இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது. கஜா புயலின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் தங்கள் தஞ்சை மண் சகோதரர்கள் படும்பாட்டில் கொஞ்சமாவது பங்கெடுக்க வேண்டுமே என்பதற்காக அரிதாரம் பூசி தெருவில் ஆடிப்பாடி பிச்சையெடுத்து நிதி திரட்டிக்கொண்டிருக்கிறார்கள் இந்த நாட்டுப்புற கலைஞர்கள்.

வாழ்வின் வறிய நிலையில் தாங்களே அரைவயிறு கால்வயிறு கஞ்சி குடித்துக்கொண்டிருக்கும் நிலையில் இப்படியெல்லாம் தெருவில் இறங்க என்ன மனசு வேண்டும்? பக்கெட்டுகளுடன் பஸ்களிலும், கடை வீதிகளிலும் கையேந்தி வரும் இந்த மதுரை மண்ணின் கலைஞர்களுக்கு நல்ல வசூலோடு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. கோடிகொடியாய் வீட்டுக்குள் பதுக்கி வைத்துக்கொண்டு கொடுக்க மனசில்லாதவர்களுக்கு இந்த இரு புகைப்படங்களும் சமர்ப்பணம்.