மு.க.அழகிரியிடம் ஆதரவு கேட்பேன் என திமுக கூட்டணியில் மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சு.வெங்கடேசன் வெளிப்படையாகக் கூறினார். ஆனால், அது மு.க.ஸ்டாலினுக்கு சங்கடத்தை ஏற்படுத்தவே அழகிரியை சந்திக்கும் முடிவிலிருந்து வெங்கடேசன் பின் வாங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

திமுகவிலிருந்து மு.க.அழகிரி ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள மார்க்சிஸ்ட் கட்சிக்கு  மதுரை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சமயத்தில், ‘’ ஒரு வேட்பாளராக அழகிரியை சந்தித்து ஆதரவு கேட்பேன்’’ எனக் கூறியிருந்தார். 

அதற்கு ‘’மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் என்னை சந்திப்பதாகச் சொல்லியிருக்கிறார். இப்படிச் சந்திப்பதில் தவறு ஒன்றுமில்லை’’ என பதிலளித்து இருந்தார் மு.க.அழகிரி. ஆனால், சு.வெங்கடேசன் சொன்னதுபோல் மு.க.அழகிரியை நேரில் சென்று சந்தித்து ஆதரவு கேட்கவுமில்லை. அவரைப் பற்றி வாயே திறக்கவில்லை.

சு.வெங்கடேசன், மு.க.அழகிரியை பார்த்து ஆதரவு கேட்கப்போவதாக சொன்னதுமே தகவலறிந்த மு.க.ஸ்டாலின், ‘’மு.க.அழகிரியின் ஒட்டு உறவே வேண்டாம் என்று தான் கட்சியை விட்டு ஒதுக்கி வைத்து இருக்கிறோம். அவரது தயவு இல்லாமல் வெற்றிபெற வேண்டும் என்பது தான் நோக்கம். அவர் பின்னால் இப்போது எந்த ஆதரவாளர்களும் இல்லை. அப்படி இருக்கும்போது திமுக கூட்டணியில் இருந்து கொண்டு அழகிரியின் ஆதரவை கேட்பது அநாகரிகம் இல்லையா? 

இது கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவுக்கு அவமானம் இல்லையா? ஒருவேளை நீங்கள் ஆதரவு கேட்டுச் சென்று வெற்றிபெற்றுவிட்டால் அந்த வெற்றி தன்னால் தான் வந்தது என அழகிரி கிளம்பினால் பிரச்னை எங்கள் குடும்பத்திற்குள் ஏற்படும். அதுதான் உங்கள் நோக்கமா?’’ என எகிறிக்குதித்து விட்டாராம் மு.க.ஸ்டாலின். அதன் பிறகே மு.க.அழகிரி பற்றி பேசுவதையே நிறுத்தி விட்டாராம் சு,வெங்கடேசன்.