மதுரையில் பாஜக மகளிரணி செயலாளர் மகாலட்சுமியின் கார் எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை தெப்பக்குளம் பங்கஜம் காலனியில் பா.ஜ.க மகளிரணி செயலாளர் மகாலட்சுமி வசித்து வருகிறார். அவரது வீட்டுக்கு முன்பாக நிறுத்தப்பட்ட கார் மீது நள்ளிரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் கார் தீப்பற்றி எரிந்தது. 

இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் மகாலட்சுமி மற்றும் குடும்பத்தாரும் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். உடனே தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இருப்பினும் காரின் பெரும்பான்மை பகுதிகள் எரிந்துவிட்டன.

கார் எரிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் பெட்ரோல் குண்டை கார் வீசி வீட்டு சென்றுள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.

 

சம்பவ இடத்தில், மது பாட்டில்கள், காலணிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணம் அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் என்று மகாலட்சுமி தனது புகாரில் தெரிவித்துள்ளார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.