மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியிலிருந்து 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில் வரும் 16-ம் தேதி திங்கள் கிழமை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல்வராக கமல்நாத் இருந்து வருகிறார். இந்நிலையில், மூத்த தலைவர் கமல்நாத் மற்றும் திக் விஜய் சிங்கை எதிர்த்து அரசியல் செய்ய முடியவில்லை. தொடர்ந்து ஜோதிராதித்ய சிந்தியா புறக்கணிக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்து வந்தார். 

இந்நிலையில், மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிரடியாக விலகினார். இதனையடுத்து, அவரது ஆதரவாளர்கள் 22 எம்எல்ஏக்களும் பதவியை ராஜினாமா செய்தனர். இதன் மீது சபாநாயகர் என்ன முடிவெடுப்பார் என்ன எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால், 22 உறுப்பினர்களை கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 206-ஆகக் குறைந்துள்ளது. பாஜகவுக்கு 107 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சிக்கு 95 உறுப்பினர்களும் உள்ளனர். பெருபான்மைக்கு 104 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 95 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். 

இந்த சூழலில் சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கும் சூழல் ஏற்பட்டால் கமல்நாத் அரசு கவிழ அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரில் தங்களுக்கு 12 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள், வாக்கெடுப்பு நடக்கும்போது அதிசயம் நிகழும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வரும் 16-ம் தேதி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பிக்கிறது. அன்றைய தினம் கமல்நாத் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என பாஜக தலைமை கொறடா நரோத்தம் மிஸ்ரா போபாலில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதனிடையே ஹோலி விடுமுறைக்குப் பின்னர் போபால் திரும்பியுள்ள ஆளுநர் லால்ஜி தாண்டனை, முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக குழுவினர் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.