திமுக தலைவர் ஸ்டாலினின் அக்கா செல்வியின் பேத்தியும், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் அக்காள் பேரனுக்கும் நிச்சயதார்த்தம் நேற்று முன்தினம் கோபாலபுரம் இல்லத்தில் ஸ்டாலின் முன்னிலையில் நடந்தது. இதுகுறித்து செய்திகள் வெளியான நிலையில், எனது ரத்த சொந்தங்கள் அறுந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது என மதுசூதனன் விளக்கம் அளித்துள்ளார்.   

ஜெயலலிதாவின் மரணிக்கும் வரை அதிமுக நிர்வாகிகளை, திமுக பக்கம் நெருங்க விடாமல் பார்த்துக்கொண்டார். ஜெயலலிதா மறைந்ததை அடுத்து தலைமை லெவலுக்கு இணக்கமான போக்கை கடைபிடித்தனர். இதில் உச்சபட்சமாக  திமுக தலைவர் ஸ்டாலினோ அதிமுகவின் முக்கிய புள்ளி வீட்டில் சம்பந்தமே வைத்துள்ளார்.  அதாவது ஸ்டாலினின் அக்கா செல்வியின் பேத்திக்கும், அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனனின் அக்காள் பேரனுக்கும் விரைவில் கல்யாணம் நடைபெற இருக்கிறது.  இதற்கான நிச்சயதார்த்தம் நேற்று முன்தினம் கோபாலபுரம் வீட்டில் நடந்தது. இதற்கு தலைமையேற்பவர்கள் ஸ்டாலினும், மதுசூதனனும் என்று ஒரு பேச்சு நிலவியது. இருவரும் ஒரு சேர அமர்ந்துதான் இந்த இனிய நிகழ்வை நடத்தி முடித்துள்ளதாக செய்திகள் வெளியானது. 

இப்படி ஒரு விசேஷம் நடந்ததாக திமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ள நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார், ஜெயலலிதாவின் முரட்டு விசுவாசி மதுசூதனன்.

அவர் வெளியிட்டுள்ள மறுப்பு செய்தியில்; ஜெயலலிதாவின் வெறித்தனமான முரட்டு விசுவாசி அதிமுகவின்  மதுசூதனன்னின் ரத்த சொந்தமே இப்படி திமுகவின் தலைமை குடும்பத்தினுள் உறவு ரீதியாக கலக்கிறது என்ற செய்தியை கண்டு மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளானேன்.  

எனது ரத்த உறவுகள் அறுந்து பல வருடங்கள் ஆகிறது. இது மறைந்த அம்மா காலத்திலிருந்தே அறுத்தெறியபட்டது என்பது அனைத்து கழக தொண்டர்களுக்கும் காலங்காலமாக தெரியும்!  கருணாநிதி குடும்பத்துடன் எனக்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை அவர் மறைவுக்கு பலர் சென்றும் கூட இறுதி வரை கருணாநிதி முகத்தையும் ஏறெடுத்து பார்க்காதவன் நான்...   நான் என்ரென்றும் MGR தீவிர பக்தனாகவே இருந்து அம்மா வழியில் அதிமுகவுக்கு தொண்டாற்றுவேன் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க நினைக்கும் சமூக வலைதள விஷமிகளுக்கும், திமுகவினருக்கும் கடும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.