சட்டவிரோதமாக குட்கா பொருட்களை தமிழகத்தில் விற்பனை செய்த வழக்கில் குடோன் உரிமையாளர் மாதவ ராவ் அப்ரூவராக மாறியுள்ளதால் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குட்கா பொருட்களுக்கு கடந்த 2013ம் ஆண்டு தமிழக அரசு தடை விதித்தது. இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் உற்பத்தி செய்யப்படும் குட்கா பொருட்களை சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ள குடோனுக்கு கொண்டு வந்து தமிழகம் முழுவதும் சப்ளை செய்து வந்தவர் மாதவராவ். தனது தொழிலுக்கு இடையூறாக இருக்க கூடாது என்பதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை காவல்துறையில் ஆணையர்களாக இருந்த ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட பலருக்கு மாதம் தோறும் லஞ்சம் கொடுத்து வந்தார் மாதவராவ்.

மாதம் தோறும் அமைச்சர் உள்ளிட்டோருக்கு கொடுக்கப்படும் லஞ்சம் தொடர்பான விவரங்களை ஒரு டைரியில் மாதவ ராவ் குறித்து வைத்திருந்தார். வருமான வரித்துறை கடந்த 2016ம் ஆண்டு சோதனை மேற்கொண்ட போது இந்த டைரி சிக்கியது. அந்த டைரியில் விஜயபாஸ்கர், காவல்துறை அதிகாரிகள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் ஆகியோருக்கு எவ்வளவ தொகை கைமாறியது என்கிற விவரம் இடம் பெற்று இருந்தது.

இந்த விவகாரத்தை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கிடப்பில் போட்டுவிட்டனர். ஆனால் தி.மு.க தொடர்ந்த வழக்கை தொடர்ந்து குட்கா ஊழல் புகார் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதுவும் டெல்லியில் உள்ள சி.பி.ஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக குடோன் உரிமையாளர் மாதவராவை தூக்கிய சி.பி.ஐ அதிகாரிகள் சுமார் 12 மணி நேரம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

இதனை தொடர்ந்து மாதவராவ் அப்ரூவராக மாறியதுடன் டைரியில் இல்லாத மேலும் பல கொடுக்கல் வாங்கல் விவரங்களை சி.பி.ஐயிடம் கக்கியுள்ளார். இதனை தொடர்ந்தே இன்று காலை அதிரடியாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தற்போதைய டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் மற்றும் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் வீடுகளுக்குள் புகுந்தது சி.பி.ஐ படை.

பொதுவாக சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டால் அதனை தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு தொடர்புடையவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும். அந்த விசாரணை முடிவில் புகாருக்கு ஆளானவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட தமிழகம் முழுவதும் ஆ.ராசா, கனிமொழி தொடர்புடைய இடங்களில் முதலில் சோதனை நடைபெற்றது. அதன் பிறகு விசாரணைக்கு டெல்லி வருமாறு சம்மன் அனுப்பப்பட்டு முதலில் ஆ.ராசாவும் பின்னர் கனிமொழியும் கைது செய்யப்பட்டனர். 

இந்த முறையிலேயே சோதனையை முடித்த பிறகு விஜயபாஸ்கருக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பும். விசாரணைக்கு ஆஜரான பிறகு விஜயபாஸ்கரை சி.பி.ஐ கைது செய்வது உறுதி என்கிறது டெல்லி வட்டாரங்கள். எனவே இன்று தொடங்கி அடுத்த வாரத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் விஜயபாஸ்கர் கைது செய்யப்படலாம்.