புதிய கல்விக்கொள்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றவேண்டிய ஆட்சியாளர்கள் வாய்மூடிக் கிடக்கின்ற நிலையில், பொதுமக்களின் மனதை ஆட்சி செய்கிற திமுக தனது தோழமை சக்திகளுடன் இணைந்து நின்று, தமிழகத்தின் கல்வி நலன் காக்கின்ற முயற்சியை மேற்கொள்ளும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கட்சித் தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள மடலில், “இந்தியாவில் ஜனநாயகம் உயிரோடு உலவிடுமா என்று நாட்டு மக்கள் அஞ்சுகிற அளவுக்கு, அதன்மீது ஊரடங்கு காலத்தில் ஒரு நூறு தாக்குதல்களைத் தொடர்ந்து தொடுத்துக் கொண்டிருக்கிறது மத்தியில் ஆளுகிற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு. எழுத்துப் பூர்வமாக அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை (எமர்ஜென்சி) என்பதுபோல, கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் வகையில் காஷ்மீர் முதல் கடைக்கோடித் தமிழகம் வரை கைது நடவடிக்கைகள் - தேசிய பாதுகாப்பு சட்டம் - குண்டர் சட்டப் பாய்ச்சல்கள் - சிறை வைப்பு உள்ளிட்டவை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மறைமுகமாக அன்றி நேர்முகமாகவே அறிவிக்கப்பட்டு ஆற்றப்பட்ட எமர்ஜென்சியையும், எழுத்தில் வடிக்கவியலா அதன் கொடுமைகளையும், நெளியாமல் வளையாமல் நெஞ்சம் நிமிர்த்தி எதிர் கொண்ட திமுகவை, இத்தகைய பூச்சாண்டித்தனங்களால் எவராலும் எதுவும் செய்து விட முடியாது; எந்தமிழ் மக்களையும் திசை திருப்பிவிட முடியாது.


உண்மையான தேசத் தலைவர்கள் பலரும் மதித்துப் போற்றிய இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்திடும் நோக்கத்துடன் மத்தியிலே உள்ள ஆட்சியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. அதனால் மக்கள் பாதிக்கப்படும்போது, நீதிமன்றத்தை நாடி அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் திமுக முன்வரிசையில் நிற்கிறது. மருத்துவப் படிப்புக்கான அகில இந்தியத் தொகுப்பில் உள்ள இடங்களில் பிற்படுத்தப்பட்டோர் - மிகப் பிற்படுத்தப்பட்டோரை உள்ளடக்கிய இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படாததால், சமூகநீதி சிதைக்கப்பட்டு, இதர பிற்படுத்தப்பட்டோரின் கல்வி உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்றது திமுக. 
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ‘அகில இந்திய மருத்துவ இடங்களில் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்ற எந்தத் தடையும் இல்லை’ என்கிற அழுத்தமான தீர்ப்பினை வழங்கி, ‘மூன்று மாதங்களுக்குள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான முடிவுகளை எடுக்கவேண்டும்” என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூகநீதிக்கான போர்க்களத்தில் சற்றும் சளைக்காமல் போரிடும் திமுக, இம்முறையும் சட்டரீதியான வெற்றியை ஈட்டியிருக்கிறது. மத்திய அரசு மேல்முறையீடு என்கிற சுற்றி வளைக்கும் சட்டவழியைக் கையாளுமானால் அதனையும் எதிர்கொள்வதற்கு உச்சநீதிமன்றத்தில் ‘கேவியட்’ மனுவைத் திமுக தாக்கல் செய்துள்ளது.
நாம் நடத்துகின்ற ஜனநாயகப் போர், ஒரு களத்துடன் முடிந்துவிடுவதில்லை. அடுத்தடுத்த களங்களும் உடனுக்குடன் தொடர்கின்றன. கரோனா பேரிடரால் ஏற்பட்ட ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி, அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் பறித்துக் கொண்டிருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. அதன் இன்னொரு கோரமுகம்தான், மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கை. உண்மையில் அது புதிய கல்விக் கொள்கை அல்ல; பழைய மனுதர்ம ஒடுக்குமுறை மீதான பளபளப்பு மிக்க ‘வர்ண’ப் பூச்சு.