கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டால், கூட்டுறவின் நோக்கமும் சிதையும்; சாமானியர்களின் வாழ்வும் நிர்கதியாகும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் நகைக்கடன்கள் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் அனைத்து நகைக் கடன்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்திலிருந்து கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர்கள் குறுஞ்ச்செய்தியை அனைத்து மாவட்ட மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ளதாக  கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் - தமிழ் நாடு அமைப்பு தெரிவித்துள்ளது.

 
இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் 23 மாநில தலைமை கூட்டுறவு வங்கி, 128 மத்திய கூட்டுறவு வங்கி, 4,250 நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் நகைக் கடன் வழங்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லும்வண்ணம் மத்திய அரசு கடந்த மாதம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதன் அடிப்படையில் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

 

இந்நிலையில் தமிழ் நாடு அரசின் இந்த உத்தரவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கூட்டுறவு சங்கங்களை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுக்க மத்திய அரசு திட்டமிடுகிறது! இனி கூட்டுறவு வங்கிகளும் சங்கங்களும் நகைக்கடன் வழங்கக் கூடாது என அறிவித்து நகைக்கடனை ரத்து செய்கிறது அதிமுக அரசு! கூட்டுறவின் நோக்கமும் சிதையும்; சாமானியர்களின் வாழ்வும் நிர்கதியாகும்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.