தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனியாக ஒரு கிராமத்துக்கு சென்றால் அவரை யாருக்கும் தெரியாது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வரும் சுதந்திர போராட்ட வீரருமான காமராஜரின் 119-வது பிறந்த நாள் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். இந்த விழாவில் பேசும்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்து பேசினார்.


 “கஜா, ஒஹி புயல்களால் பாதிப்பு ஏற்பட்டபோது அந்தப் பகுதிகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்று பார்வையிட வில்லை. அதே போல் தற்போது நீலகிரிக்கும் சென்று பாதிக்கப்பட்ட பகுதியைப் பார்வையிடவில்லை. ஒரு கிராமத்துக்கு நான் தனியாக சென்றால்கூட மக்கள் என்னை அடையாளம் கண்டுகொள்வார்கள். ஆனால், முதல்வர் பழனிசாமி பாதுகாப்பின்றி தனியாக சென்றால் அவர் யார் என்றுகூட மக்களுக்கு தெரியாது. முதல்வர் வந்திருப்பதாக யாராவது சொன்னால்தான் மக்களுக்கு அவரை அடையாளம் தெரியும்” என்று விமர்சித்து மு.க. ஸ்டாலின் பேசினார்.


அண்மையில் நீலகிரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்று பார்வையிட்டார். இதுபற்றி கருத்து தெரிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “சீன் போட ஸ்டாலின் சென்றிருக்கிறார். விளம்பரம் தேடிக்கொள்ளவே சென்றிருக்கிறார்” என்று விமர்சனம் செய்தார். அதற்கு பதில் அளிக்கும்விதமாக மு.க. ஸ்டாலின், “மக்களுக்கு நான் ஏற்கனவே நன்கு அறிமுகமானவன்தான். எனக்கு எந்த விளம்பரமும் தேவையில்லை” என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது முதல்வரை யாருக்கும் தெரியாது என்று மு.க. ஸ்டாலின் பேசியிருக்கிறார்.