நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்களைபோல் திமுக எம்பிக்கள் ஜடமாக இருக்க மாட்டார்கள் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காட்டமாகப் பேசினார். 
திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிக்கும் பொதுக்கூட்டங்கள் மண்டல வாரியாக நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி திருச்சி மண்டலத்தில் நன்றி அறிவிக்கும் பொதுக்கூட்டம் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.


“திமுக பொய்ப் பிரசாரம் செய்ததாக அதிமுகவினர் கூறுகிறார்கள். இதன்மூலம் திமுகவின் வெற்றியை அதிமுக கொச்சைப்படுத்தி வருகிறது. அப்படியானால் மோடி வெற்றி பெற்றது பொய் பிரசாரமா? 37 எம்பிக்களை வைத்து என்ன பயன் என்கிறார்கள். நாடாளுமன்றம் கூடும்போது என்ன செய்வோம் என்று தெரியும். அதிமுக எம்பிக்களைபோல் திமுக எம்பிக்கள் ஜடமாக இருக்க மாட்டார்கள். 
காவிரி தண்ணீர் பற்றி கேட்டால் மேகேதாது பற்றி பேசுகிறார்கள். அது காவிரி ஆணையமா, கர்நாடகா ஆணையமா? மேட்டூரில் 8 ஆண்டுகளாக காவிரி தண்ணீர் உரிய காலத்தில் திறக்கப்படவில்லை. எடப்பாடிக்கு இதைப் பற்றி கவலை உண்டா? எட்டு வழிச்சாலையில் காட்டும் அவசரத்தை ஏன் காவிரியில் காட்டவில்லை? எட்டு வழி சாலைத் திட்டம் வந்தால் மூவாயிரம் கோடி ரூபாய் வரும். மக்களை சமாதானப்படுத்திகொண்டு 8 வழிச்சாலையை கொண்டுவந்தே தீருவேன் என்பதுதான் விவசாயியான எடப்பாடியின் நோக்கமா?


 நீட் தேர்வுக்கு கடந்த ஆண்டு இரண்டு பேரை பலி கொடுத்தோம். இப்போது மூன்று பேரை பலி கொடுத்திருக்கிறோம். இந்தத் தற்கொலைக்கெல்லாம் மத்திய, மாநில அரசுகளே காரணம். நாடாளுமன்றத் தேர்தலைப் போல சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஒரு மரண அடியை அதிமுக அரசுக்கு கொடுக்க வேண்டும்” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.