இன்று இந்தியா பற்றி எரிய அதிமுகவும் பாமகவும்தான் காரணம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னை கொளத்துாரில் திமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கிறிஸ்தவ மக்களுக்கு உதவிகள் வழங்கி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.  “குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டப்போது, அதை எதிர்த்து திமுக எம்.பி.க்கள் பேசியதை நீங்கள் டி.வி.யில் பார்த்திருப்பீர்கள். அந்தச் சட்டத்தை முழுமையாக வெற்றி பெறா வைக்க பாஜகவுக்கு மாநிலங்களவையில் பலம் இல்லை. திமுகவுக்கு மா நிலங்களவையில் 5 பேர் இருக்கிறார்கள். ஐந்து பேருமே அந்த மசோதாவை எதிர்த்து வாக்களித்தனர். அதேபோல், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் எதிர்த்து வாக்களித்தன. 
ஆனால், தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுகவைச் சேர்ந்த 1 பேரும், அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாமகவின் ஓர் உறுப்பினரும் இந்த மசோதாவை திர்த்து ஓட்டு போட்டிருந்தால் இந்தச் சட்டத்தை அப்போதே முறியடித்திருக்க முடியும். ஆனால், இவர்கள் ஆதரித்து ஓட்டு போட்டார்கள். இதனால் இன்றைக்கு தமிழ் நாடு மட்டுமல்ல; இந்தியாவே பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. கலவரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு அதிமுகவும் பாமகவும்தான் காரணம்.


இந்தச் சட்டத்தை எதிர்த்து, 23-ம் தேதி சென்னையில் மிகப்பெரிய பேரணியை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். அதன் பிறகும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால், அடுத்தகட்டமாக மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம். எல்லோரும் பேசி முடிவெடுத்து தமிழகம் இதுவரை சந்தித்திருக்காத வகையில் இந்தப் போராட்டத்தை நடத்துவோம்.

 
இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமையை  வலியுறுத்துவோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார். அதை எப்படி வலியுறுத்த முடியும். தற்போது நிறைவேறியுள்ள சட்டத்தில் அது இடம்பெற்றுள்ளதா? இந்தச் சராசரி அறிவுகூட ஒரு முதல்வருக்கு இல்லை. மக்களிடம் பொய் சொல்லிக் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொண்டிருக்கிறார். யார் பொய் சொல்கிறார்கள், யார் மக்களுக்காகப் பாடுபடுகிறார்கள் என்பது விரைவில் தெரியத்தான் போகிறது.” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.