திருச்சி மாவட்ட திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் காணொலி காட்சி மூலம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில் அவர் பேசும்போது, “கொரோனா காலத்திலும் விடாமல் கொள்ளையடிக்கக் கூடியவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் சிக்கியுள்ளது. இந்த அமைச்சரவையை கிரிமினல் கேபினட், கரெப்ஷன் கேபினட் என்று அழைப்பதே வழக்கம். ஓர் அமைச்சரவையே ஒட்டுமொத்தமாக ஊழல் மயமாக உள்ளது. ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் அரசாங்கம் இது. இந்த அமைச்சரவைக்குத் தலைமை தாங்கிக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியே சிபிஐ விசாரணைக்கு உட்பட்டவர்தான். இதை தமிழக மக்கள் மறந்துவிடவில்லை. 
தன் மீதான புகார்களை எல்லாம் சிபிஐ விசாரிக்கப் போகிறது என்று தெரிந்ததும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ன செய்திருக்க வேண்டும்? பதவி விலகி இருக்க வேண்டும். வழக்கு விசாரணையை எதிர்கொண்டிருக்க வேண்டும். நிரபராதி என்று நிரூபித்துவிட்டு பதவியை அடைவேன் என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அவர் என்ன செய்தார்? உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று தடை வாங்கினார். தடை வாங்கியதால் இப்போது வரை பதவியில் இருக்கிறார். பாஜகவுக்குப் பாதம் தாங்கும் அடிமையாக இருக்க பழனிசாமி சம்மதித்ததால்தான் அவர் வெளியில் இருக்கிறார். இதுதான் தமிழ்நாட்டின் இன்றைய முதல்வரின் நிலை.
துணை முதல்வர் என்று ஒருவர் இருக்கிறார். அவரை இப்போது எல்லோரும் தியாகி என்றுதான் அழைக்கிறார்கள். ஏதோ அவருக்கு முதல்வர் பதவி தேடி வந்துவிட்டதைப் போலவும், அதனை அவர் பழனிசாமிக்கு விட்டுக் கொடுத்துவிட்டதைப் போலவும் அவரைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதிமுகவே தோற்கப் போகிறது, தோற்கப் போகும் கட்சிக்கு பழனிசாமியே வேட்பாளராக இருக்கட்டும் என்று தந்திரமாக நழுவிக் கொண்டவர்தான் ஓ. பன்னீர்செல்வம். அதனால், பன்னீர்செல்வம் தியாகியும் அல்ல, பழனிசாமி முதல்வர் ஆகப்போவதும் அல்ல என்பதை நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் காட்டத்தான் போகிறது.” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.