கீழடியில் கிடைத்த பொருட்களைக் கொண்டு உடனடியாக அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்த அகழாய்வு குறித்து தமிழக தொல்லியல்துறை ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. அதில் வைகை நதிக்கரை நாகரிகம் 2, 600 ஆண்டுகள் பழமையானது எனக் குறிப்பிட்டது. இதனையடுத்து கீழடி உலக அளவில் உள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கீழடியில்  கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் காட்சிக்கு வைக்கவேண்டும் என்றும் அப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் கீழடியில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு அருங்காட்சியகத்தை விரைந்து அமைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  “கீழடியில் மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் கிடைத்த அரிய பொருட்களை பெங்களூரு உள்ளிட்ட பிற இடங்களில் இருந்து மீண்டும் கீழடிக்கே கொண்டு வந்து, அருங்காட்சியகத்தை விரைந்து அமைத்து, மக்களுக்குக் காட்சிப்படுத்த மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' எனத் தெரிவித்துள்ளார்.
கீழடியில் பல்வேறு கட்டங்களில் எடுக்கப்பட்ட பொருட்கள் பெங்களுரூ, சென்னையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கொண்டு ஆய்வறிக்கை தயாரிக்க தொல்லியல் துறைக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால், அந்த ஆய்வறிக்கை இதுவரை தயாரிக்கப்படவில்லை. இந்நிலையில் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுவருகிறது.