இனியாவது, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கி தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது உச்ச நீதிமன்ற உத்தரவை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
 “2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கோரி திமுக கூட்டணி கட்சிகள் வழக்குத் தொடுத்தன. அதை ஏற்று உச்சநீதி மன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. 2016-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுத்தபோது, அரசு செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா பிரமாண பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், 1991 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 2016 தேர்தலுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தற்போது உச்ச நீதிமன்றத்தில் அதை மாற்றி 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2016 தேர்தலுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. தற்போது 2011ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இடஒதுக்கீட்டை வெளியிட்டு தேர்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இனியாவது, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தலை உச்சநீதிமன்றம் நிறுத்தியுள்ளது. இது அதிமுக அரசுக்குக் கிடைத்த மரண அடி. மக்களைச் சந்திக்க திமுக எப்போதுமே தயாராக உள்ளது.” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.