அரசாங்கத்துக்கு இருக்கிற பணமோ, வசதியோ கிடையாது. ஆனாலும் எங்களை நம்பிக் கேட்ட மக்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளைச் செய்கிறோம். ஏனென்றால், திமுக என்பது மக்கள் அரசாங்கம். திமுக தொண்டர்களின் உள்ளம் என்பது மாபெரும் கஜானா என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மே 3-ம் தேதிக்கு பிறகு மீண்டும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் திமுக ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி அறிவிக்கப்பட்டுள்ள எண்ணுக்கு அழைப்போருக்கு உணவு பொருட்கள் வழங்கப்படும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


இந்நிலையில் இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "உங்களையும் உங்கள் உறவுகளையும் பாதுகாத்து, அதன்மூலமாக இந்த நாட்டையும் பாதுகாக்கும் கடமை எல்லோருக்கும் இருக்கிறது! தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு ஏறக்குறைய 2 மாதங்கள் ஆகிவிட்டன. தற்போது இந்த நோய்த் தொற்றுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 20-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். 
ஒரு மாதத்திற்கும் மேல் ஊரடங்கு நீடிப்பதால் லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு-குறு தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தினசரி சம்பளம் வாங்குவோர், அன்றாட கூலிகள், விவசாயிகள், விற்பனையாளர்கள் என தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடைய துன்ப துயரத்தை ஓரளவு துடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு வாரத்துக்கு முன்பு 'ஒன்றிணைவோம் வா' - எனும் திட்டத்தைத் தொடங்கினோம். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, மருந்துப் பொருட்களை வாங்கிக் கொண்டு போய் தருவதுதான் இந்த திட்டத்தின் ஒரே நோக்கம். கஷ்டப்படுகிறவர்களுக்கு காவல் அரணாக இருப்பதே ஒரே எண்ணம். 
அறிவித்த உடனேயே, இந்தத் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தத் திட்டம் தொடங்கியதிலிருந்து இதுவரை 6 லட்சம் பேர் இந்த ஹெல்ப்லைனை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்கள். இதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. என் மீதும் திமுக மீதும் மக்கள் வைத்திருக்கிற நம்பிக்கையை இது காட்டுகிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்களுக்கு கஷ்டம் என்றால் வந்து நிற்பது திமுகதான் என மக்கள் நினைப்பதால்தான், நம்பிக்கை வைத்து இந்த ஹெல்ப்லைனில் பேசியிருக்கிறார்கள்.


எந்த அழைப்பு வந்தாலும் அதை உடனே சரி பார்த்து, அதுகுறித்து தீவிரமாக விசாரித்து, மக்களுக்குத் தேவையானப் பொருட்களை எங்களால் முடிந்த அளவு வாங்கிக் கொண்டு போய் சேர்த்து வருகிறோம். நாம் அரசாங்கம் கிடையாது. அரசாங்கத்துக்கு இருக்கிற பணமோ, வசதியோ கிடையாது. ஆனாலும் எங்களை நம்பிக் கேட்ட மக்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளைச் செய்கிறோம். ஏனென்றால், திமுக என்பது மக்கள் அரசாங்கம். திமுக தொண்டர்களின் உள்ளம் என்பது மாபெரும் கஜானா. திமுகவின் உள்கட்டமைப்பு என்பது வேரிலிருந்து வலுவானது. அந்தக் கட்டமைப்பை வைத்து இந்த இக்கட்டான சூழலிலும், கொரோனா காலத்திலும் களத்தில் நிற்கிறோம்.