மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஆளுநர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க பல அரசியல் கட்சிகளும் ஆளுநரை வலியுறுத்திவருகின்றன. இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இதுதொடர்பாக ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளார். 
அக்கடிதத்தில், “கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்பதே திமுகவின் தீர்மானமான கோரிக்கை. அக்கோரிக்கை நிறைவேறும் வரை, 2017-2018ம் கல்வியாண்டு முதல் நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து ஆராய உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலையரசன் தலைமையில் மூத்த வல்லுநர்களை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது.


அந்தக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் “எம்.பி.பி.எஸ் மற்றும் நீட் தேர்வு மாநிலத்தில் தகுதித் தேர்வான பிற மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தகுதி பெற்ற அரசுப் பள்ளிகளின் மாணவர்களுக்கு முன்னுரிமை” அளிக்கப்டுவதன் மூலம் அரசுப் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் படித்த மாணவர்கள் இடையே ஒரு சமத்துவத்தைக் கொண்டு வரலாம் என தமிழக அரசால் முடிவு எடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா கொண்டு வரப்பட்டது. கடந்த செப்டம்பர் 15 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் அக்டோபர் 16 அன்று வெளியிடப்பட்ட நிலையில் - தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால்தான் இந்தக் கல்வியாண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியும்.


ஆகவே, இந்த மசோதாவை ஆதரித்து நிறைவேற்றிய பிரதான எதிர்க்கட்சியான திமுக சார்பில் இந்த மசோதாவுக்கு உடனடியாகத் தாங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை நிறைவேற்றிட முன்வர வேண்டும்” என்று கடிதத்தில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.