இளைஞரணி பொறுப்பை என்னை கருணாநிதி பாராட்டியதுபோல, உதயநிதியைப் பாராட்டும் சூழல் எனக்கும் வரும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் 1.20 லட்சம் பேர் திமுக இளைஞரணியில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டனர். குறுகிய காலத்தில் உறுப்பினர்களைச் சேர்த்த  நிர்வாகிகளுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கினார்.

 
இந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பேசும்போது, “திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி பொறுப்பேற்றது முதல் கட்சிக்கு வலுசேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் 10 ஆயிரம் பேரை இளைஞர் அணியில் சேர்க்க முடிவெடுத்து, மொத்தம் 30 லட்சம் பேரைச் சேர்க்க திட்டமிடப்பட்டது. ஆனால், 30 லட்சமென்ன 50 லட்சம் பேரை இளைஞரணியில் இணைக்கலாம் எனும் நம்பிக்கை எனக்கு வந்துள்ளது. சென்னை தெற்கு மாவட்டத்தில் 1.20 லட்சம் பேர் இளைஞரணியில் புதிதாக சேர்ந்துள்ளனர்.


இளைஞரணியின் பொறுப்பில் என் செயல்பாடுகளைப் பார்த்து முத்தமிழறிஞர் கலைஞர் என்னைப் பாராட்டி இருக்கிறார். அதேபோல உதயநிதியைப் பாராட்டும் சூழல் எனக்கு ஏற்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த நிகழ்வு.” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.