Asianet News TamilAsianet News Tamil

ராஜேந்திர பாலாஜியைத் தொடர்ந்து செல்லூர் ராஜூ, உதயகுமார் மீது அட்டாக்... அமைச்சர்களைக் குறி வைக்கும் ஸ்டாலின்.!

வைகை ஆற்று நீரை தெர்மகோல் கொண்டு மூடியது முதல் - நமக்கெல்லாம் கொரோனா வராது என்று கதை விட்டது வரை, முழுக்க முழுக்க காமெடி சேனல் நடத்திக் கொண்டு இருக்கிறார் செல்லூர் ராஜு என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

M.K.Stalin attacked Ministers Sellur Raju and R,.B. Udayakumar
Author
Chennai, First Published Nov 9, 2020, 9:31 PM IST

திமுக சார்பில் மதுரையில் ‘தமிழகம் மீட்போம் - 2021’ சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பங்கேற்று பேசினார். “மதுரைக்கு மோனோ ரயில் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். வந்ததா, இல்லை. தேவர் சிலை அருகே பறக்கும் பாலம் என்றார்கள். வந்ததா, இல்லை. ஆனால் மதுரையை இரண்டாவது தலைநகராக்கப் போகிறோம் என்ற காமெடியை மதுரை அமைச்சர்களாக இருக்கும் செல்லூர் ராஜுவும், உதயகுமாரும் விடவில்லை.

M.K.Stalin attacked Ministers Sellur Raju and R,.B. Udayakumar
"கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானத்தில் ஏறி வைகுண்டம் காட்டுவேன்" என்றானாம். அதைப் போல மதுரைக்கு சிறுசிறு நன்மைகளைக் கூடச் செய்து கொடுக்க முடியாத இவர்கள், மதுரையைத் தலைநகர் ஆக்குவேன் என்று வாய்ப்பந்தல் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். மதுரை வைகை நதியை லண்டன் தேம்ஸ் நதி போலவும், மதுரையை ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைப் போலவும், இத்தாலியின் ரோம் நகரைப் போலவும் மாற்றுவேன் என்றும் செல்லூர் ராஜு சொன்னார். என்னைப் பொறுத்தவரையில் செல்லூர் ராஜுவுக்கு நான் சொல்வது, சிட்னியாக, ரோம் நகராக மாற்றவேண்டாம். இப்போது இருக்கும் மதுரையை மேலும் கெடுக்காமல் இருந்தாலே போதும் என்பதுதான் என்னுடைய மிகமிகத் தாழ்மையான வேண்டுகோள்.

M.K.Stalin attacked Ministers Sellur Raju and R,.B. Udayakumar
செல்லூர் ராஜுவும், உதயகுமாரும் ஒட்டுமொத்தமாக மதுரையைப் பாழாக்கியவர்கள். இதை நான் சொல்லவில்லை. இங்குள்ள அதிமுக தொண்டர்களிடம் விசாரித்தாலே சொல்லிவிடுவார்கள். இவர்கள் இரண்டு பேரும் தங்கள் துறையில் என்ன சாதனைகள் செய்தார்கள் என்றால் யாருக்கும் சொல்லத் தெரியாது. ஆனால், என்ன காமெடி செய்தார்கள், நகைச்சுவைப் பேட்டிகள், இன்றைக்குப் புதிதாக என்ன தத்துவ முத்துக்களை உதிர்த்துள்ளார்கள் என்று கேட்டால், மக்கள் வரிசையாக பட்டியல் போட்டுச் சொல்வார்கள். வைகை ஆற்று நீரை தெர்மகோல் கொண்டு மூடியது முதல் - நமக்கெல்லாம் கொரோனா வராது என்று கதை விட்டது வரை, முழுக்க முழுக்க காமெடி சேனல் நடத்திக் கொண்டு இருக்கிறார் செல்லூர் ராஜு. குடிமகன்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன என்று சொன்னாரே, அதை கல்வெட்டாக செதுக்கி, அவரை அதற்குப் பக்கத்தில் உட்கார வைக்கலாம்.M.K.Stalin attacked Ministers Sellur Raju and R,.B. Udayakumar
இவர் ஒரு பேட்டி கொடுத்துவிட்டால் போதும், அடுத்த அரைமணி நேரத்தில் மைக் முன்னால் வந்துவிடுவார் உதயகுமார். இரண்டு பேருக்கும் எதில் போட்டி என்றால், பேட்டி கொடுப்பதில் போட்டி. மதுரையை ரோம் ஆக்குவேன் என்று செல்லூர் ராஜு சொன்னதும், ஆர்.பி.உதயகுமார் சொல்கிறார், 'மதுரையின் வளர்ச்சியா? அமைச்சர் பதவியா என்றால், நான் மதுரையின் வளர்ச்சியில்தான் கவனம் செலுத்துவேன்' என்று சொல்லி இருக்கிறார். இந்த உலகமகா நடிப்பை இவர்கள் இருவரிடம்தான் பார்க்க முடியும்.” என்று மு.க. ஸ்டாலின் பேசினார். 
சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது மு.க. ஸ்டாலின் விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில் இன்று அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரை விமர்சித்து பேசியிருக்கிறார் மு.க. ஸ்டாலின்.

Follow Us:
Download App:
  • android
  • ios