தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை ‘பப்ளிக் சர்வீஸ் கமிஷன்’ என்று சொல்லக்கூடாது. ‘பப்ளிக் சர்வீஸ் கரப்ஷன்’ என்றுதான் சொல்ல வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னை வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் இல்லத் மணவிழாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். அந்த விழாவில் அவர் பேசும்போது, “டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டைப் பற்றிய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அதை ‘பப்ளிக் சர்வீஸ் கமிஷன்’ என்று சொல்லக்கூடாது. ‘பப்ளிக் சர்வீஸ் கரப்ஷன்’ என்றுதான் சொல்ல வேண்டும். புரோக்கர் ஜெயகுமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தானாக முன்வந்து ஆஜராக வேண்டிய அவசியம் என்ன? உண்மை நிலவரத்தை வெளியில் கொண்டுவர வேண்டும் என்பதற்காக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
முறைகேடுகள் அனைத்தும் மேலிட உத்தரவுடன் நடந்திருக்கிறது என்று சந்தேகப்படுகிறோம். அந்தத் துறையின் அமைச்சராக இருக்கும் ஜெயக்குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கும் நேரத்தில் ஒன்று விடாமல் மக்களிடத்தில் எடுத்துச் சொல்வோம். அதுமட்டுமல்ல; அதற்குரிய தண்டனையையும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உரியவர்களுக்குப் பெற்றுத் தருவோம்.” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.
இதற்கிடையே டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பாக மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அதில், “தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடந்த ஊழல்கள் குறித்த செய்திகள் தினமும் நாளிதழ்களில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதைப் பார்த்து வெட்கித் தலைகுனிய வேண்டிய தமிழக அரசும், அமைச்சர்களும் சிறிதும் நாணமின்றி நடமாடிவருகிறார்கள். குரூப் 4, குரூப் 2 ஏ ஆகியவை குறித்த செய்திகளை வெளியிட்டு, ' தமிழக அரசு நியாயமாக நடவடிக்கை எடுத்து வருகிறது' என்ற மாயமானதும், பொய்யானதுமான தோற்றத்தை உருவாக்கிட அரும்பாடுபட்டு வருகிறார்கள்.
இந்த ஆட்சியின் தேர்வாணைய ஊழலுக்கு முழு முதல் உதாரணமாகச் சொல்ல வேண்டியது குரூப் 1 தேர்வில் நடந்த முறைகேடுதான். இந்த ஊழலை அப்படியே மறைக்க தமிழக அரசு ஆலாய்ப் பறக்கிறது. ஆளும்கட்சிக்கு சார்பாக ஆட்டம் போட்ட அடாவடி நபர்களைக் காப்பாற்ற நினைக்கிறார்கள் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்ட விரும்புகிறேன்.

 
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு தொடர்பாக 2017ம் ஆண்டு பதிவான வழக்கு 2018ம் ஆண்டு ஜனவரியில் முடக்கப்பட்டது. ஓராண்டு கழித்து 2019ம் ஆண்டு ஜூன் 18 அன்று விசாரணை அதிகாரியான உதவி கமிஷனர் சுந்தரவதனன் ஒரு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் அவர் சில உண்மைகளை வெளியில் கொண்டு வருகிறார்.
1. வெற்றி பெற்ற 74 பேரின் விடைத்தாள்களை ஆராய்ந்து பார்த்ததில் 3 விடைத்தாள்கள், ஒரே ஆளின் கையெழுத்தில் உள்ளது. 2. வெற்றி பெற்ற 74 பேரில் 65 பேர் ஒரே சென்டரில் படித்துள்ளார்கள். எனவே இந்த சென்டரில் இருந்த ஆவணங்கள் அனைத்தையும் கைப்பற்றி விட்டோம்.  என்று அறிக்கை தருகிறார். உடனடியாக விசாரணை அதிகாரி சுந்தரவதனன் மாற்றப்படுகிறார். புதிதாக உதவி கமிஷனர் சுப்பிரமணிய ராஜூ என்பவர் நியமிக்கப்படுகிறார். இவர்தான் இறுதி அறிக்கையை முன்வைக்கப் போகிறார் என்று தகவல்கள் வருகின்றன.


யாரோ ஒரு மாணவர், இம்மாதிரியான முறைகேட்டில் இறங்க முயற்சித்ததாகவும், அதில் தோல்வி அடைந்த காரணத்தால், விரக்தியால் இப்படிப்பட்ட தகவல்களைப் பரப்பி, தனியார் தொலைக்காட்சிக்கு ஒரு விடைத்தாளைத் தயாரித்து அனுப்பியதாகவும் சொல்லி, இந்த வழக்கை மூடி முடித்து வைப்பதற்கு தமிழக அரசு முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. மூன்று விசாரணை அதிகாரிகளை மாற்றி, மூன்று நீதிபதிகள் மாறும் வரை காத்திருந்து, தமிழக அரசு செய்த தில்லுமுல்லான காரியங்கள் அனைத்தும், ஆளும்கட்சிக்கு சார்பான ஒரு சில நபர்களைக் காப்பாற்றுவதற்குத்தான் என்பது இதன் மூலம் அறிய முடிகிறது.
குரூப் 1 தேர்வில் நடந்த அனைத்து முறைகேடுகளும் விரைவில் வெளிச்சத்துக்கு வர வேண்டும். 2017ம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரித்து, சேகரித்த உண்மைகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பிரச்னையில் தொடர்புடைய மனிதநேயம், அப்போலோ நிறுவனங்கள், விருப்பு வெறுப்பின்றி நியாயமாகவும் முழுமையாகவும் விசாரிக்கப்பட வேண்டும். 'டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்துக்கு உட்பட்டவர்கள்தான்' என்று உலக மகா யோக்கியர் போலப் பேட்டி தரும் அமைச்சர் ஜெயக்குமார், உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத்தர முன்வருவாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.