சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியைச் சுற்றி பல செய்திகள் வட்டமடிக்கத் தொடங்கியுள்ளன. மு.க. அழகிரி கலைஞர் திமுக என்ற பெயரில் கட்சி தொடங்க உள்ளார் என்றும், பாஜகவில் இணையப்போகிறார் என்றும், சென்னைக்கு வரும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கப்போகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகிவருகின்றன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், ‘மு.க. அழகிரி பாஜாகவில் இணைந்தால் வரவேற்போம்” என்று தெரிவித்திருந்தார்.


 இதுகுறித்து மு.க. அழகிரி தற்போது கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள மு.க. அழகிரி, “பாஜகவில் சேருவது பற்றியோ புதிய கட்சி தொடங்குவது பற்றியோ இதுவரை நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை. பாஜகவுக்கு நான் வந்தால் வரவேற்போம் என எல்.முருகன் கூறுவது அவருடைய கருத்து. என்னுடைய ஆதரவாளர்களுடன் பேசி விரைவில் நல்ல முடிவை எடுப்பேன். நான் பாஜகவில் சேரப்போவதாக சிலர் காமெடி செய்துக்கொண்டு இருக்கிறார்கள்” என்று மு.க. அழகிரி தெரிவித்தார்.