அவசரநிலை பிரகடனப்படுத்த வேளையில் மு.க.ஸ்டாலின், கழகத்தின் முக்கிய தளகர்த்தர்களுடன் கைது செய்யப்பட்டிருந்தார். சென்னை மத்திய சிறையின் 9-ம் பிளாக்கில்தான் அவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர்.

9-ம் நம்பர் பிளாக்கில் அடைபட்டுக் கிடப்பதும், நரகத்தில் நாமாக விருப்பப்பட்டு போய் ரூம் போட்டு உட்காருவதும் சமமே. அந்தளவுக்கு அசுத்தங்களும், சிறை காவலர்களின் அத்துமீறல்களும் நிறைந்த பிளாக் அது.

அதில்தான் அரசியல் கைதிகளான ஸ்டாலின் உள்ளிட்டோரை அடைத்து வைத்திருந்தனர். ஒவ்வொரு அறையும் ஐந்தடி அகலம், ஒன்பதடி நீளம்தான் இருக்கும். இதில் ஒரு அறைக்கு ஐந்து பேர், ஆறு பேர் என்று அடைத்து வைத்திருந்தனர்.

அந்த அறை உருவாக்கப்பட்ட தினத்திலிருந்து சுத்தம் செய்யப்பட்டதே கிடையாது. சிறைக்காவலர்களின் லத்தி விளையாட்டால் சிதறிய கைதிகளின் ரத்தங்கள் சுவற்றில் படிந்திருக்கும். பயம் மற்றும் அவசரத்தால் கைதிகள் கழித்த மலமானது திட்டுத்திட்டாய் தரையில் உறைந்திருக்கும். இவற்றின் மீதுதான் ஸ்டாலின் உள்ளிட்டோர் படுத்திருந்தனர். இரவு, பகல் என இரண்டு  வேளைகளுமே இருள் மண்டிக் கிடக்கும் பகுதி அது.

இதற்கு முன் தொழுநோயாளிகள் அந்த அறையில் அடைத்து வைக்கப்பட்டிருதனராம். அவர்கள் தங்கள் புண்ணை துடைத்துவிட்டு போட்ட, ரத்தம் தோய்ந்த பஞ்சுகள் அறை முழுவதும் சிதறிக் கிடக்கும். அதில் புழுக்கள் உருவாகி இருந்தன. இப்படியாப்பட்ட அறையில்தான் எதிர்காலத்தில் சென்னை மேயராகவும், தமிழக துணை முதல்வராகவும், தி.மு.க. எனும் பெரும் இயக்கத்தின் செயல் தலைவராகவும் விஸ்வரூபமெடுக்க இருந்த ஸ்டாலின் அடைபட்டுக் கிடந்தார்.

தொழுநோயாளிகள், காச நோயாளிகள், பாலியல் நோயாளிகள் அடைக்கப்படும் செல்லில் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை சிறைத்துறை அடைத்தது முழுக்க முழுக்க மத்திய அரசின் உத்தரவுப்படித்தான்! என்று கொதித்தனர் தி.மு.க.வினர்.

சிறையில் களியும், கூழும் கொடுக்க கூடாது! என்று சட்டத்தை கொண்டு வந்து, அதை முதலில் சென்னை மத்திய சிறையில்தான் மாற்றியமைத்தார் கருணாநிதி. ஆனால் அவசரநிலை பிரகடனத்தில் கைதான அவரது மகன் ஸ்டாலின் உள்ளிட்டோருக்காக வேண்டுமென்றே களி, கூழை தயாரித்து கொடுத்தனர் சிறை அதிகாரிகள்.

இரவு பகல் பாராது எந்நேரமும் செல்லுல் அடைக்கப்பட்டிருந்த ஸ்டாலின் டீமுக்கு ஒரு பானையை கொடுத்து அதில்தான் சிறுநீர் கழித்துக் கொள்ள சொல்லியிருக்கிறாகர்கள். சில வேளைகளில் அந்த பானையே நீர் எடுத்து குடிக்க உதவும் குவளையாகவும் இருந்தது தனி கதை!

இந்த சித்ரவதைக்கு நடுவில்தான் அடிபட்டு அடிபட்டு மெருகேறினார் ஸ்டாலின்.