குடியுரிமை திருத்த மசோதாவை ஆதரிப்பவர்கள் இந்திய அடிப்படை கட்டமைப்பை அழிக்க முயற்சிக்கிறவர்கள் என ராகுல்காந்தி சிவசேனாவை விமர்சனம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு, சமீபத்தில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதாவை, இரு அவைகளிலும் நிறைவேற்றி, சட்டமாக அமல்படுத்த, மத்திய அரசு தீவிரமாக காட்டியது.

இந்நிலையில், நேற்று மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். குடியுரிமை சட்ட மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என அமித்ஷா விளக்கமளித்தார். ஆனால் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து, மசோதா மீது 9 மணி நேரத்திற்கும் மேல் நீண்ட விவாதம் நடந்தது. விவாதத்திற்கு பின் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் பதிவாகின. இதனையடுத்து மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவுக்கு மகாராஷ்ராவில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியில் இருக்கும் சிவசேனாவும் ஆதரவு அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மகாராஷ்ராவில் தனது கட்சியின் புதிய கூட்டாளியான சிவசேனா மக்களவையில் மசோதாவை நிறைவேற்ற பாஜக அரசுக்கு ஆதரவளித்ததை அடுத்து ராகுல்காந்தி இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்தவர்கள் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் அவரது டுவிட்டரில் கூறியிருப்பதாவது குடியுரிமை திருத்த மசோதா இந்திய அரசியலமைப்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இதனை ஆதரிப்பவர்கள் இந்திய அடிப்படை கட்டமைப்பை அழிக்க முயற்சிக்கிறவர்கள் என விமர்சித்துள்ளார்.