மக்களவை தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட உள்ளார். கேரள மாநிலம் வயல்நாடு தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி விருப்பம் தெரிவித்துள்ளார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி தகவல் தெரிவித்துள்ளார். 

கடந்த மக்களவை தேர்தலில் நரேந்திர மோடி வாரணாசி மற்றும் வதோதரா ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். 2 தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றார். பின்னர் வதோதரா தொகுதி உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இந்த முறை பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் குஜராத் மற்றும் ஒடிசாவில் மற்றொரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

 

மோடியை பின்பற்றி ராகுல் காந்தியும் 2 மக்களவை தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரசார் வற்புறுத்தி வந்தனர். இந்நிலையில் ராகுல்காந்தி அமேதி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  

இந்நிலையில் தமிழகத்தில் ராகுல்காந்தி போட்டியிட கே.எஸ்.அழகிரியும் கோரிக்கை விடுத்திருந்தார். அதேபோல் கேரளா அல்லது கர்நாடகாவில் மற்றொரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரசார் வற்புறுத்தி வந்தனர். ராகுல் காந்தி இங்கு போட்டியிட்டால் அது தென் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு வழி வகுக்கும் என்று காங்கிரசார் கூறிவந்தனர். 

அதன்அடிப்படையில் கேரளாவின் வயல்நாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட உள்ளார். மேலும் ராகுல் வயல்நாடு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார் என முன்னாள் அமைச்சரும் அந்தக் கட்சியின் மூத்த தலைவருமான ஏ.கே.அந்தோணி தகவல் தெரிவித்துள்ளார்.