டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அமித்ஷா அளித்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு தமிழக தலைவர்கள் வெறும் கையோடு திரும்பியுள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளை கண்டுகொள்ளாத அமித் ஷா மற்றும் மோடி திடீர் என கட்சித் தலைவர்களுக்கு டெல்லியில் விருந்து வைத்து அசத்தினர். இதற்கு காரணம் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக விற்கு தனிப் பெரும்பான்மை கிடைக்க சிறிதளவே வாய்ப்பு இருக்கிறது என்கிற கருத்து கணிப்பு தான். எனவேதான் வாஜ்பாய் போல கூட்டணி அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளில் அமித் ஷா மற்றும் மோடி வியூகம் வகுத்து வருகின்றனர். அதன் ஒரு அம்சமாகவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து விருந்து வைத்துள்ளனர். 

டெல்லி அசோகா ஹோட்டலில் நடைபெற்ற இந்த இரவு விருந்தில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிதிஷ்குமார், உத்தவ் தாக்கரே, சுக்பிர் பாதல், ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒருசேர கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ஏ.சி. சண்முகம், வின் டிவி தேவநாதன் உள்ளிட்டோரும் விருந்தில் பங்கேற்றனர். 

சிறிய அளவில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் தமிழகத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் மட்டுமே ஏற்றப்பட்டனர். மற்ற அனைவரும் கீழே இருக்கை அமைக்கப்பட்டு அங்கு அமர வைக்கப்பட்டிருந்தனர். துவக்கத்திலேயே பாஜக தலைவர் அமித் ஷா பேசியுள்ளார். அப்போது மீண்டும் பாஜக தலைமையில் அமைய உள்ள அரசு அனைத்துக் கூட்டணிக் கட்சிகளுக்கும் உரிய பங்கு அளிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் கடந்த 5 ஆண்டுகளாக ஒத்துழைப்பு கொடுத்த கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் அமித்ஷா நன்றி தெரிவித்துள்ளார். 

இதன்பிறகு உத்தவ் தாக்கரே, சுக்பீர் பாதல், நிதீஷ்குமார் ஆகியோருடன் மோடி மற்றும் அமித் ஷா தனித்தனியாக பேசியுள்ளனர். அப்போது கூட்டணி அரசு தொடர்பாகவும் கேபினட் அமைச்சர்கள் பங்கேற்று கொள்வதாகவும் சில வாக்குறுதிகளை கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இப்படி ஒரு பேச்சு வார்த்தை தமிழகத்திலிருந்து சென்ற எந்த தலைவருடனும் நடைபெறவில்லை. ஒரு ஓரமாக அமர்ந்து டின்னரையும் முடித்து விட்டு தமிழக தலைவர்கள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு உள்ளனர். 

மத்திய அமைச்சர் பதவி ஆசையில் சென்ற அன்புமணி ராமதாஸ், கிருஷ்ணசாமி உள்ளிட்டோரும் அமித் ஷாவை நெருங்க கூட முடியவில்லை என்கிறார்கள். இதனால் டெல்லி சென்ற வேகத்தில் வெறும் கையுடன் அனைவரும் திரும்பியுள்ளனர்.