மக்களவை தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பை தானே ஏற்றுக் கொள்கிறேன் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் டெபாசிட் கூட வாங்க முடியாமல் அமமுக படுதோல்வி அடைந்தது. இதனால், அதிருப்தி அடைந்த அக்கட்சியிலிருந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாற்று கட்சியில் இணைந்து வந்தனர். அக்கட்சியில் நம்பிக்கையாக நட்சத்திரமாக திகழ்ந்த செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் அதிமுக மற்றும் திமுகவில் இணைந்தனர். இது டி.டி.வி.தினகரனுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. இதனையடுத்து கட்சியை பலப்படுத்தும் நோக்கில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். 

இந்நிலையில், தஞ்சையில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய டி.டி.வி.தினகரன், ஹைட்ரோ கார்பனை எடுத்து டெல்டா மாவட்டத்தை சோமாலியாவாக மாற்ற நினைக்கிறார். செழிப்பான நாடாக இருந்த சோமாலியா நாடு அமெரிக்காவின் கைக்கூலியாக பொம்மை ஆட்சி நடந்து கொண்டிருந்த போது இதுபோன்ற நிலைமைக்கு ஆளானது. தற்போது எம்.எல்.ஏ.க்கள் தயவினால்தான் எடப்பாடி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. 

மு.க.ஸ்டாலின் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால், அவர்கள் எம்.எல்.ஏ.க்களே அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று அவருக்கே தெரியும். நடந்து முடிந்த தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். தேர்தலில் சிலர் பணியாற்றாததால் தோல்வியடைந்ததா? அல்லது வேறு காரணங்களால் தோல்வி அடைந்ததா என்பது வரும் தேர்தலில் புரிந்துவிடும். தேர்தல் தோல்விக்கான காரணம் வெளிவரும். யாரும் சோர்வடைய தேவையில்லை என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.